சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டவர் தேவர்: வைகோ புகழாரம்
மதுரை: முத்துராமலிங்கத் தேவர் குருபூஜையையொட்டி, மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள அவரது சிலைக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர், நிருபர்களிடம் வைகோ கூறியதாவது: 49வது ஆண்டாக தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியுள்ளேன். இடையில் சிறையில் இருந்த காலங்களில் வரமுடியாமல் போனது. பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டவர். மீனாட்சி அம்மன் கோயிலுக்குள் ஒடுக்கப்பட்டவர்கள் செல்வது தொடர்பாக காந்தியடிகள் உரிய ஏற்பாடு செய்ய கூறினார். இதன்படி, வைத்தியநாத ஐயர் ஏற்பாடு செய்தபோது ஒரு சிலர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதையடுத்து முத்துராமலிங்கத் தேவரை ராஜாஜி சந்தித்தார். அப்போது, ஒடுக்கப்பட்ட மக்களுடன் சேர்ந்து தானும் கோயிலுக்குள் செல்வேன் எனவும், அதை தடுத்தால் நடப்பது வேறு எனவும் தேவர் கூறினார். அதைத் துண்டு பிரசுரமாகவும் அச்சடித்து வழங்கினார். இதனால்தான் ஆலய பிரவேசத்தின்போது எந்த பிரச்னையும் நடக்கவில்லை. நாட்டின் விடுதலைக்காக அதிக நாட்கள் சிறையில் இருந்தவர். நேதாஜியின் மறு உருவமாக திகழ்ந்தார். விண்ணுலகும், மண்ணுலகும் உள்ள வரை தேவரின் புகழ் நிலைத்து நிற்கும். இவ்வாறு வைகோ கூறினார்.