தேரூர் பேரூராட்சி அதிமுக முன்னாள் தலைவர் சதி சான்றிதழை ரத்து செய்த தனிநீதிபதி உத்தரவை உறுதி செய்தது ஐகோர்ட் கிளை
மதுரை: கன்னியாகுமரி மாவட்டம் தேரூர் பேரூராட்சியின் தலைவராக அதிமுகவை சேர்ந்த அமுத ராணி தேர்வு செய்யப்பட்டார். இதே தேரூர் பேரூராட்சியில் ஐயப்பன் என்பவர் வார்டு கவுன்சிலராக தேர்வு செய்யப்பட்டார். இந்த பேரூராட்சியில் தலைவர் பதவி என்பது பட்டியல் சமுகத்தை சேர்ந்த மக்களுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்நிலையில், கிருஸ்தவராகஉள்ள அமுதராணி பட்டியல் சமுக சான்றிதழை போலியாக கொடுத்து தலைவர் பதவியை அடைந்துள்ளதாக உயர்நீதிமன்ற மதுரைகிளையில் ஐயப்பன் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி விக்டோரியா கௌரி; அமுத ராணியின் சாதி சான்றிதலை ரத்து செய்து உத்தரவிட்டார். பட்டியல் சமுகத்தை சேர்ந்தவர் வேறு மதம் மாறினால் பட்டியல் சமுகத்தினருக்கு அளிக்கப்படும் சலுகைகளை அனுபவிக்க முடியாது. மதம் மாறிய பிறகு அந்த மதத்திற்குன்டான சலுகைகளை மட்டுமே அனுபவிக்க முடியும். எனவே இந்த சாதி சான்றிதழ் ரத்து செய்யப்படுகிறது என அறிவித்திருந்தார். இதனை தொடர்ந்து அவரது பதவி பறிக்கப்பட்டது.
இந்த தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து உயர்நீதிமன்ற மதுரைகிளையில் அமுதராணி தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், ராஜசேகர் முன்பாக விசாரணை செய்யப்பட்டது. இந்த விசாரணையில் தனி நீதிபதியின் உத்தரவை 2 நீதிபதிகள் அடங்கிய அமர்வு உறுதி செய்தது.
நீதிபதிகள் கூறுகையில்; தனிநீதிபதியின் உத்தரவு தெளிவாக உள்ளது. ஒருவர் பட்டியல் சமுகத்தில் இருந்து மற்றொரு மதத்திற்கு மாறிவிட்டால் அவர் அந்த பலனை அனுபவிக்க முடியாது. சம்பந்தபட்ட நபர் கிறிஸ்தவ மதத்தை தழுவியுள்ளார். அதற்கு போதிய ஆதாரங்கள் உள்ளது. எனவே தனி நீதிபதியின் உத்தரவை உறுதிசெய்து மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்யப்படுகிறது என கூறினர்.
ஒருவர் ஒரு மதத்தில் இருந்து மற்றொரு மதத்திற்கு மாறுவது என்பது இந்திய அரசியலமைப்பு வழங்கிய அடிப்படை உரிமை. அவ்வாறு இருக்கும் பட்சத்தில் தனது புதிய நிலையை மறைத்து பழைய அடையாளத்தில் அரசியலமைப்பு வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளை அனுபவிக்கும் போது இது போன்ற பிரச்சனைகள் வருகின்றன என நீதிபதிகள் தெரிவித்தனர்.