வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து 70 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்க வாய்ப்பு!
சென்னை: வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து சுமார் 70 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட வாய்ப்பு என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த நவம்பர் 4ம் தேதி முதல் 9ம் தேதி (நேற்று) வரை நடந்த SIR பணிகளின் விவரங்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதில், தமிழகத்தில் உள்ள 6 கோடியே 41 லட்சத்து 14 ஆயிரத்து 587 வாக்காளர்கள் உள்ளனர். நேற்று வரை 6 கோடியே 40 லட்சத்து 84 ஆயிரத்து 624 படிவங்கள், அதாவது 99.95 சதவீதம் வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டுவிட்டது. அவற்றில் 6 கோடியே 38 லட்சத்து 25 ஆயிரத்து 877 படிவங்கள் அதாவது 99.55 சதவீதம் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, வரும் 16ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது.
இந்நிலையில், வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து சுமார் 70 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட வாய்ப்பு என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இறந்தவர்கள் 25 லட்சம், இடம் மாறியவர்கள் 40 லட்சம், இரட்டை பதிவு 5 லட்சம் என 70 லட்சம் பேரின் பெயர்கள் வரும் 16ம் தேதி வெளியாகும் வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட உள்ளன. வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் டிச.16 முதல் ஜனவரி 15ம் தேதி வரை பெயரை சேர்க்க விண்ணப்பிக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த ஒரு மாத காலகட்டத்தில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுமா என்பதை விரைவில் தேர்தல் ஆணையம் அறிவிக்கும். இந்த காலகட்டத்தில் பெறப்பட்ட விண்ணப்பங்களை பரிசீலனை செய்து பிப்ரவரி 14ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது.