அன்புமணியின் பொதுக் குழுவுக்குத் தடையில்லை: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னை: பாமக பொதுக்குழுவுக்கு தடையில்லை என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் நாளை பாமக பொதுக்குழு கூட்டத்தை, அன்புமணி நாளை கூட்டியுள்ளார். அன்புமணி ராமதாஸ் அழைப்பு விடுத்துள்ள பொதுக்குழுவுக்கு தடை விதிக்க வேண்டுமென ராமதாஸால் நியமிக்கப்பட்ட மாநில பொதுச்செயலாளர் முரளி சங்கர் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது; ராமதாஸ், அன்புமணி ஆகியோரிடம் நீதிபதி விசாரணை நடத்திய நிலையில் வழக்கறிஞர் வாதம் நடைபெற்றது. நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் காணொலி காட்சி மூலம் பாமக நிறுவனர் ராமதாஸ் ஆஜரானார். கட்சியினர், வழக்கறிஞர் யாருமின்றி நீதிபதி அறையில் ஆஜராகி அன்புமணி விளக்கம் அளித்தார். ராமதாஸ், அன்புமணி வழக்கறிஞர் வாதத்தை தொடர்ந்து நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தீர்ப்பு வழங்கினார்.
அதில்; பொதுக்குழு கூட்ட அன்புமணிக்கு அதிகாரமில்லை என்ற ராமதாஸ் தரப்பு வாதம் நிராகரிக்கப்பட்டுள்ளது. மாமல்லபுரத்தில் நாளை அன்புமணி தலைமையில் நடக்கும் பொதுக்குழுவுக்கு தடை இல்லை. உத்தரவிட்டுள்ளது. நாளை திட்டமிட்டப்படி அன்புமணி தலைமையில் பாமக பொதுக்குழு நடைபெறும். உட்கட்சி விவகாரம் தொடர்பாக சிவில் நீதிமன்றத்தை ராமதாஸ் தரப்பு அணுகலாம் என ராமதாஸ் தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.