தேன்கனிக்கோட்டை அருகே டிரான்ஸ்பார்மரை உடைத்து ஆயில், காப்பர் கம்பிகள் திருட்டு
தேன்கனிக்கோட்டை : தேன்கனிக்கோட்டை அருகே டிரான்ஸ்பார்மரை உடைத்த மர்ம நபர்கள் ஆயில், காப்பர் கம்பிகளை திருடி சென்றனர்.கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே பேளகொண்டபள்ளி மின்வாரிய பிரிவு உளிவீரனப்பள்ளி கிராமத்தில், தனியார் தொழிற்சாலை அருகே நேற்று முன்தினம் இரவு, மர்மநபர்கள் மின்சார டிரான்ஸ்பார்மரை உடைத்து, அதிலிருந்த காப்பர் கம்பிகள் மற்றும் ஆயிலை திருடி சென்றுள்ளனர். இதன் மதிப்பு சுமார் ரூ.2லட்சம் ஆகும்.
கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு, காடுலக்கசந்திரம், அரசகுப்பம் மற்றும் தேன்கனிக்கோட்டை அஞ்செட்டி சாலையில் ஆகிய மூன்று இடங்களில் மர்ம நபர்கள் டிரான்ஸ்பார்மர்களை உடைத்து, சுமார் ரூ.9 லட்சம் மதிப்புள்ள கம்பிகள் மற்றும் ஆயிலை திருடி சென்றுள்ளனர்.
தொடர்ந்து மர்ம நபர்களால் டிரான்ஸ்பார்மர்கள் உடைத்து காப்பர் கம்பிகள், ஆயில் திருடப்படும் சம்பவத்தால் வீட்டு மின் சப்ளை, குடி தண்ணீர், விவசாயம் போன்றவை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மிகவும் கவலை அடைந்துள்ளனர்.