காற்றாலை இயந்திரம் உடைந்து விழுந்தது: தாராபுரம் அருகே பரபரப்பு
தாராபுரம்: காற்றின் வேகம் தாங்காமல் காற்றாலை இயந்திரம் உடைந்து விழுந்த சம்பவம் தாராபுரம் அருகே பரபரப்பை ஏற்படுத்தியது. திருப்பூர் மாவட்டம் தாராபுரம்-பொள்ளாச்சி சாலை அருகே உள்ளது சீலநாயக்கன்பட்டி. இங்குள்ள செரியன் காடுதோட்டம் என்ற இடத்தில் சென்னையை தலைமை இடமாக கொண்ட தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான காற்றாலை இயங்கி வருகிறது. இதன் பராமரிப்பு பணிகளை தனியார் நிறுவனம் கவனித்து வருகிறது. இந்நிலையில் இன்று காலை காற்றின் வேகம் தாளாமல் காற்றாலை இயந்திரம் உடைந்து கீழே விழுந்தது. இதில் 60 அடி உயர காற்றாடிகள் 9 துண்டுகளாக உடைந்து சிதறியது.
இதன் மதிப்பு ரூ. 5 கோடி இருக்கும் என காற்றாலை நிறுவன ஊழியர்கள் தெரிவித்தனர். இதனால் அருகில் சென்ற மின்கம்பிகள் துண்டிக்கப்பட்டு மின் தடை ஏற்பட்டது. அருகில் உள்ள தோட்டங்களில் விவசாயிகள் பயிரிட்டிருந்த வெங்காய பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாமலும், குடியிருப்புகளுக்கு மின் இணைப்பு இல்லாததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர். உடைந்து விழுந்த காற்றாடி குடியிருப்பு பகுதிகளுக்குள் பறந்து சென்று விழுந்திருந்தால் கால்நடைகள், பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்கும். எனவே காற்றாலைகளை முறையாக பராமரித்து இயக்க அதன் நிறுவனங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.