சீனாவுக்கு ‘செக்’ வைக்க புதிய வியூகம்; ஆப்கான் விமானப்படை தளத்தை மீண்டும் கைப்பற்ற திட்டம்: அமெரிக்க அதிபர் அறிவிப்பால் பரபரப்பு
லண்டன்: சீனாவைக் கட்டுப்படுத்த, ஆப்கானிஸ்தானில் உள்ள பக்ராம் விமானப்படை தளத்தை மீண்டும் கட்டுப்பாட்டில் கொண்டுவர முயற்சிப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளது சர்வதேச அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தானில் சுமார் 20 ஆண்டுகளாக அமெரிக்காவின் மிகப்பெரிய ராணுவத் தளமாக விளங்கிய பக்ராம் விமானப்படை தளம், கடந்த 2021ம் ஆண்டு அப்போதைய அதிபர் ஜோ பைடன் நிர்வாகத்தால் கைவிடப்பட்டது. அமெரிக்கப் படைகள் அங்கிருந்து வெளியேறிய சில வாரங்களிலேயே, ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றி, அந்தத் தளத்தையும் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். இந்த வெளியேற்றத்தை ‘முழுப் பேரழிவு’ என அப்போது தற்போதைய அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடர்ந்து விமர்சித்து வந்தார்.
இந்த நிலையில், இங்கிலாந்து பிரதமர் கீர் ஸ்டார்மருடன் நடந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பக்ராம் தளத்தை மீண்டும் கைப்பற்ற தனது நிர்வாகம் தீவிரமாக செயல்பட்டு வருவதாகக் கூறியுள்ளார். அவர் பேசுகையில், ‘ஆப்கானிஸ்தானுக்காக அல்ல, சீனாவுக்காகவே அந்தத் தளத்தை நாங்கள் வைத்திருக்க விரும்பினோம். சீனாவின் அணு ஆயுத உற்பத்தி மையங்களுக்கு மிக அருகில் பக்ராம் அமைந்துள்ளது. தலிபான்களுக்கு எங்களிடமிருந்து சில உதவிகள் தேவைப்படுவதால், அவர்களை எங்களது வழிக்குக் கொண்டு வர முடியும்’ என்றார். இதற்கு முன்னர், பக்ராம் தளத்தை சீனா பயன்படுத்துவதாக டிரம்ப் குற்றம்சாட்டியபோது, தலிபான்கள் அதனை மறுத்திருந்தனர். தற்போது டிரம்பின் இந்தப் புதிய அறிவிப்பு குறித்து தலிபான்கள் தரப்பில் இருந்து எந்த பதிலும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.