காசா போர் நிறுத்த தீர்மானம் மீண்டும் முறியடிப்பு; 6வது முறையாக ‘வீட்டோ’ அதிகாரத்தை பயன்படுத்திய அமெரிக்கா: உலக நாடுகள் கடும் கண்டனம்
நியூயார்க்: ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் காசா போர் நிறுத்தத் தீர்மானத்தை அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரத்தால் தடுத்து நிறுத்தியது. இதற்கு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் கடந்த 2023 அக்டோபர் முதல் தொடர்ந்து வரும் நிலையில், காசாவில் லட்சக்கணக்கான மக்கள் உணவு, மருந்து உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் இன்றி தவித்து வருகின்றனர். அங்கு பஞ்சம் நிலவுவதாக ஐ.நா. அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும், இஸ்ரேல் இனப்படுகொலையில் ஈடுபடுவதாக ஐ.நா.வின் சர்வதேச விசாரணைக் குழு சில நாட்களுக்கு முன்பு குற்றம்சாட்டியிருந்தது.
இந்தச் சூழலில், காசாவில் உடனடியாக நிரந்தரப் போர் நிறுத்தத்தை அமல்படுத்தக் கோரி ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. ஆனால், அமெரிக்கா தனது ‘வீட்டோ’ எனப்படும் சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி இந்தத் தீர்மானத்தை ஆறாவது முறையாகத் தடுத்து நிறுத்தியுள்ளது. பாதுகாப்பு கவுன்சிலின் தற்காலிக உறுப்பு நாடுகள் இணைந்து கொண்டு வந்த இந்தத் தீர்மானத்தில், நிபந்தனையற்ற போர் நிறுத்தம், ஹமாஸ் பிடியில் உள்ள அனைத்துப் பிணைக்கைதிகளையும் உடனடியாக விடுதலை செய்தல், காசாவிற்குள் நுழையும் மனிதாபிமான உதவிகளுக்கான தடைகளை நீக்குதல் ஆகிய கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
கவுன்சிலில் உள்ள 15 உறுப்பு நாடுகளில், அமெரிக்காவைத் தவிர மற்ற 14 நாடுகளும் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தன. ஆனால், இந்தத் தீர்மானம் ஹமாஸ் அமைப்பைக் கண்டிக்கத் தவறிவிட்டதாகவும், இஸ்ரேலின் தற்காப்பு உரிமையை அங்கீகரிக்கவில்லை என்றும் கூறி அமெரிக்கா இதனை நிராகரித்தது. அமெரிக்காவின் இந்த முடிவுக்கு பாலஸ்தீனம், அல்ஜீரியா உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. அமெரிக்காவின் இந்த முடிவை இஸ்ரேல் வரவேற்றுள்ளது.