கோடியக்கரையில் முன்கூட்டியே சீசன் துவங்கியது வெளிநாடுகளில் இருந்து பறவைகள் வருகை: சுற்றுலா பயணிகள் உற்சாகம்
வேதாரண்யம்: கோடியக்கரை பறவைகள் சரணாலயத்தில் முன்கூட்டியே சீசன் துவங்கி உள்ளது. வெளிநாடுகளில் இருந்து பறவைகள் வந்துள்ளது. நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கோடியக்கரையில் வன விலங்குகள் சரணாலயம் உள்ளது. இந்த சரணாலயத்துக்கு எதிரே பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது. இது வெளிநாட்டு பறவைகளின் நுழைவு வாயில் என்று அழைக்கப்படுகிறது. பறவைகளின் புகலிடமாகவும் திகழ்ந்து வருகிறது. இங்கு ஆண்டுதோறும் 290 வகையான பறவைகள் வந்து செல்லும். அக்டோபர் முதல் மார்ச் வரை சீசன் காலமாகும். வடதுருவம் பகுதியில் நிலவும் கடும் குளிரை போக்குவதற்காக இங்கு லட்சக்கணக்கான பறவைகள் வந்து செல்கின்றன.
வழக்கமாக ரஷ்யா, சைபீரியா நாடுகளில் இருந்து பூநாரை, ஆர்டிக் பிரேதேசத்தில் இருந்து பச்சை கால் உள்ளான், சிகப்பு கால் உள்ளான், பவளக்கால் உள்ளான் என 47 வகையான உள்ளான் மற்றும் இலங்கையில் இருந்து கடல் காகம், கடல் ஆலா, ஈரான், ஈராக்கில் இருந்து கூழை கிடா, அன்டார்டிகா பகுதியில் இருந்து பறவைகள் அதிகளவில் வந்து செல்லும். அக்டோபர் மாதம் தான் சீசன் துவங்கும் என்றாலும் வேதாரண்யத்தில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக விட்டு விட்டு மழை பெய்து வருவதால் சீதோஷ்ண நிலை மாறியுள்ளது. இதனால் சைபீரியா, ரஷ்யாவில் இருந்து பூநாரை என்று அழைக்கக்கூடிய பிளமிங்கோ, வண்ண நாரை, கருவால் முக்கான், கடல் ஆலா, உப்பு கொத்தி, பவளக்கால் உள்ளான், சிவப்புக்கால் உள்ளான் உள்ளிட்ட பறவைகள் கோடியக்கரைக்கு வந்துள்ளது. இதனால் கோடியக்கரையில் முன்கூட்டியே சீசன் துவங்கியுள்ளது.
சுற்றுலா பயணிகளும் உற்சாகத்துடன் பறவைகளை பார்வையிட்டு வருகின்றனர். இதுகுறித்து கோடியக்கரை வனச்சரகர் ஜோசப் டேனியல் கூறியதாவது: கோடியக்கரையில் அக்டோபர் முதல் மார்ச் வரை பறவைகள் சீசன் காலமாகும். ஆண்டுதோறும் 5 லட்சம் முதல் 10 லட்சம் பறவைகள் வந்து செல்கிறது. பறவைகள் வாழ்வதற்கு ஏற்ற இடமாக கோடியக்கரை திகழ்வதால் ஆண்டுதோறும் பறவைகள் வரத்து அதிகரித்து வருகிறது. வேதாரண்யத்தில் சீதோஷ்ண நிலை நன்றாக இருப்பதால் வெளிநாடுகளில் இருந்து பறவைகள் வர துவங்கியுள்ளது. பறவைகளை பார்வையிட காலை 6 மணி முதல் 10 மணி, பிற்பகல் 3 மணி முதல் 6 மணி வரை சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவர் என்றார்.