பவித்திர உற்சவத்தின் முக்கிய விழா: ஸ்ரீரங்கம் கோயிலில் இன்று பூச்சாண்டி சேவை
திருச்சி: பூலோக வைகுண்டம் என போற்றப்படுவதும் 108 வைணவ தலங்களில் முதன்மையானதுமான திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் இந்தாண்டுக்கான பவித்ரோற்சவம் நேற்று தொடங்கியது. இதையொட்டி நேற்று காலை நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு யாகசாலை வந்தார். பின்னர் அங்கு சிறப்பு திருவாராதனம் கண்டருளினார். இதைத்தொடர்ந்து மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை திருமஞ்சனம் நடைபெற்றது. இரவு 11 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானம் சென்றடைந்தார். பவித்ர உற்சவத்தையொட்டி உற்சவர் நம்பெருமாள் தினமும் மாலை மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு தங்க கொடிமரத்திற்கு அருகே உள்ள பவித்ர உற்சவ மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதிப்பார்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான பூச்சாண்டி சேவை எனப்படும் அங்கோபாங்க சேவை இன்று பிற்பகல் நடக்கிறது. மதியம் 2 மணி முதல் மாலை 6 மணி வரை இந்த பூச்சாண்டி சேவையை பக்தர்கள் தரிசிக்கலாம். பூச்சாண்டி சேவையின்போது மூலவர் ரங்கநாதரின் திருமேனி முழுவதும் நூலிழைகளை சுருள், சுருளாக வைத்து அலங்கரித்திருப்பர். இது அச்சமூட்டுவது போல் இருக்கும். எனவே இதை பூச்சாண்டி சேவை என்பர். பவித்ர உற்சவத்தின் 7ம் நாளான வரும் 9ம்தேதி நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் கோயில் கொட்டாரத்தில் நெல் அளவு கண்டருள்கிறார். உற்சவத்தின் நிறைவு நாளான வரும் 11ம்தேதி காலை நம்பெருமாள் சந்திர புஷ்கரணியில் தீர்த்தவாரி நடக்கிறது. மறுநாள் பெரியபெருமாள் ரங்கநாதர் திருமேனிக்கு இந்த ஆண்டுக்கான இரண்டாவது தைலக்காப்பு நடைபெறுகிறது.