ஆன்லைன் சூதாட்டத்திற்கு முடிவு; ‘வாரன்ட்’ இல்லாமல் கைது செய்ய அதிகாரம்: புதிய விதிகள் குறித்து கருத்து கேட்பு
டெல்லி: ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கு தடை விதித்து, வாரன்ட் இன்றி கைது செய்யும் அதிகாரம் உள்ளிட்ட கடுமையான விதிகளை ஒன்றிய அரசு வெளியிட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் விளையாட்டு ஊக்குவிப்பு மற்றும் ஒழுங்குமுறைச் சட்டத்தை அமல்படுத்தும் வகையில், ஒன்றிய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் ‘ஆன்லைன் விளையாட்டு ஊக்குவிப்பு மற்றும் ஒழுங்குமுறை வரைவு விதிகள், 2025’-ஐ வெளியிட்டுள்ளது. இதன்படி, பணம் அல்லது பணமாக மாற்றக்கூடிய வெற்றிகளை வழங்கும் அனைத்து ஆன்லைன் விளையாட்டுகளுக்கும் தடை விதிக்கப்படுகிறது. இதில், ரம்மி, ஃபேண்டஸி ஸ்போர்ட்ஸ் போன்ற திறமை அடிப்படையிலான விளையாட்டுகளும் அடங்கும்.
இந்த புதிய விதிகளின்படி, தடையை மீறுபவர்களுக்கு மிகக் கடுமையான தண்டனைகள் விதிக்கப்பட்டுள்ளன. ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை நடத்துபவர்களுக்கு 3 ஆண்டுகள் வரையிலும், அவற்றை விளம்பரப்படுத்துபவர்களுக்கு 2 ஆண்டுகள் வரையிலும் சிறைத் தண்டனையும், முறையே 1 கோடி ரூபாய் மற்றும் 50 லட்சம் ரூபாய் வரை அபராதமும் விதிக்கப்படும். குற்றம் நடப்பதாக சந்தேகம் எழுந்தால், அங்கீகரிக்கப்பட்ட அதிகாரிகள் வாரன்ட் இன்றி சோதனையிடவும், கைது செய்யவும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. மேலும், முக்கிய குற்றங்கள் ஜாமீனில் வெளிவர முடியாதவையாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. இந்த வரைவு விதிகள் மீது பொதுமக்கள் அக்டோபர் 31ம் தேதி வரை கருத்து தெரிவிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.