அமெரிக்காவால் பாதிக்கப்பட்டுள்ள தொழில்களின் வராக்கடன் விதியை தளர்த்த வேண்டும்: மார்க்சிஸ்ட் எம்.பி வலியுறுத்தல்
மதுரை: ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு மதுரை மார்க்சிஸ்ட் எம்பி சு.வெங்கடேசன் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: அமெரிக்கா விதித்துள்ள கூடுதல் இறக்குமதி வரி காரணமாக பல சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் கடுமையான பாதிக்கப்பட்டுள்ளன. இதன் விளைவாக வங்கிக் கடன்களைச் செலுத்த முடியாமல், அவை வராக்கடன்களாக மாறும் அபாயம் உள்ளது. இது குறித்து தொழில் முனைவோர்கள் எனது கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர். அமெரிக்காவின் வரிக் கொள்கையால் குறு, சிறு, நடுத்தர தொழில்கள் மீது கடுமையான எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவின் மொத்த ஏற்றுமதியில் குறு, சிறு, நடுத்தர தொழில்கள் 45 சதவீதம் வரை பங்கு வகிக்கின்றன. இந்தியாவின் மொத்த ஏற்றுமதியில் 25 சதவீதம் பங்கு வகிக்கும் ஜவுளி, கடல் உணவு, நகைகள் ஆகிய துறைகளும் கடுமையாகப் பாதிக்கப்படும் வாய்ப்புள்ளது.
மேற்படி துறைகளில் குறு, சிறு, நடுத்தர தொழில்களுக்கு 70 சதவீதத்திற்கும் மேல் பங்கு உள்ளது. ரசாயனத் துறையும் கடுமையாக பாதிப்பை எதிர்கொள்கிறது. இதன் ஏற்றுமதியில் குறு, சிறு, நடுத்தர தொழில்களுக்கு 40 சதவீத பங்கு உண்டு. தமிழ்நாட்டில் இதன் தாக்கம் மிகவும் கடுமையாக உள்ளது. ஏனெனில், ஜவுளி ஏற்றுமதியில் தமிழகம் முக்கிய மாநிலமாக திகழ்கிறது. இவற்றில் பெரும்பாலான அலகுகள் குறு, சிறு, நடுத்தர தொழில்களை சேர்ந்தவையே. வெளிநாட்டு வாடிக்கையாளர்களின் அறிவுறுத்தல்படி, ஏற்றுமதி ஒத்திவைக்கப்பட்டதால் கையிருப்புகள் அதிகரித்து வருகின்றன. நூற்பு முதல் ஆடை தயாரிப்பு வரை உள்ள முழு வழங்கல் சங்கிலியும், இந்த வரிப்போரின் காரணமாக கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாகப் பாதிக்கப்பட்டுள்ளது. குறுகிய காலத்திலேயே மாற்று ஏற்றுமதி சந்தைகளைப் பெறுவது சிரமமானதாக உள்ளது.
இதனால் குறு, சிறு, நடுத்தர தொழில்கள், வங்கிகளின் கடன் பொறுப்புகளை நிறைவேற்றுவதை கடினமாக்கி, செலுத்த தவறும் கடன்களை வராக்கடன் வகைக்கு தள்ளக்கூடும். இதன் விளைவாக அந்த நிறுவனங்களின் எதிர்காலக் கடன் பெறும் தகுதியும் பாதிக்கப்படும். இந்தச் சூழலில், ஒன்றிய நிதியமைச்சர் உடனடியாக தலையிட்டு, இந்திய ரிசர்வ் வங்கியிடம் விதிமுறைகளை தளர்த்தவும், நெருக்கடியின்போது குறு, சிறு நடுத்தர தொழில்களின் கடன் கணக்கை, வராக்கடனாக வகைப்படுத்தாமல் இருக்க வங்கிகளுக்கு அறிவுறுத்துமாறு வேண்டுகிறேன். அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யும் இந்திய குறு, சிறு, நடுத்தர தொழில்களுக்கு வரி உயர்வு பிரச்னையில் சாதகமான தீர்வு கிடைக்கும் வரை இந்த நிவாரணம் தொடர வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு கடிதத்தில் தெரிவித்துள்ளார்.