பதில் இல்லை
கிட்டத்தட்ட 96 நாட்கள் கழித்து ஜூலை 28ஆம் தேதி பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட 3 தீவிரவாதிகளை சுட்டுக்கொன்றுள்ளனர். காஷ்மீர் டாக்சிகாம் பகுதியில் உள்ள வனப்பகுதியில் பதுங்கியிருந்த அவர்களை சுட்டுக்கொன்று விட்டதாக ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. ஆபரேஷன் சிந்தூா் பற்றி நாடாளுமன்ற விவாதம் தொடங்கி முதல் நாளிலேயே காஷ்மீரில் பதுங்கியிருந்த 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். அதாவது 96 நாட்கள் அவர்கள் இந்திய மண்ணில் தான் பதுங்கியிருந்துள்ளனர்.
அவர்களை இதுவரை நமது உளவுப்படையோ அல்லது நமது ராணுவமோ கண்டறிய முடியவில்லை என்பது எத்தனை கொடூரம். அவர்களிடம் இருந்து ஆயுதங்கள் மீட்கப்பட்டதாக தெரிகிறது. 96 நாட்கள் தலைமறைவாக இருந்த இந்த தீவிரவாதிகள் பஹல்காம் தாக்குதல் போல் இன்னொரு தாக்குதல் நடத்தியிருந்தால் என்னவாகி இருக்கும்? இத்தனைநாள் அவர்கள் பதுங்கியிருந்ததை கண்டுபிடிக்காதது ஏன்? இத்தனை நாட்கள் அவர்கள் பதுங்கியிருக்க உதவி செய்தது யார்?. வனப்பகுதியில் அவர்கள் பதுங்கியிருந்த இடத்திற்கு சென்று உணவு அளித்தது யார்?.
அந்த 3 தீவிரவாதிகளுக்கு தேவைப்படும் இன்னும்பல உதவிகைள செய்தது யார்? ஏராளமான கேள்விகள். எப்படியும் சிலர் உதவியிருக்கலாம். அதைக்கூட நமது உளவு அமைப்பு கோட்டை விட்டுவிட்டதா? அப்படியானால் பஹல்காம் போல் இன்னொரு தாக்குதல் நடப்பதை நமது உளவுப்படை எப்படி கண்டுபிடிக்கும் என்ற கேள்வி எழாதா?. நாட்டு மக்கள் மனதில் எழுந்த இதே கேள்விகள் நாடாளுமன்றத்திலும் எம்பிக்களால் எழுப்பப்பட்டுள்ளன. ஆனால் வழக்கம் போல் உரிய பதில் அளிக்காமல் ஒன்றிய அமைச்சர் அமித்ஷா காங்கிரஸ் பக்கம் பாய்ந்து விட்டார்.
‘இது மன்மோகன் சிங் ஆட்சி அல்ல, அமைதியாக இருப்பதற்கு. காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் இந்தியாவை ரத்தம் சிந்தவைத்த பயங்கரவாதிகளை நாங்கள் கொன்றோம். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் உருவானதற்கு நேரு மட்டுமே காரணம். 1960ல் சிந்து நதி நீரில் 80% பாகிஸ்தானுக்குக் கொடுக்கப்பட்டது. 1971ல் சிம்லா ஒப்பந்தத்தின்போது ஆக்கிரமிப்பு காஷ்மீர் பற்றி காங்கிரஸ் மறந்துவிட்டது.
அப்போது அவர்கள் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷர்மீர் பகுதியை கைப்பற்றி இருந்தால், இப்போது அங்குள்ள முகாம்கள் மீது தாக்குதல் நடத்த வேண்டிய அவசியம் இருந்திருக்காது’ என்றெல்லாம் கூறி இன்றைய கேள்விக்கு அளிக்க வேண்டிய விளக்கத்தை மறந்து விவாதத்தை வேறு பக்கம் கொண்டு சென்று விட்டார். பஹல்காமில் கொடூரமான பயங்கரவாதத் தாக்குதல் திட்டமிடப்பட்டிருப்பதை உளவுத்துறை ஏன் கண்டறியவில்லை?.
இதற்கு பொறுப்பேற்று உள்துறை அமைச்சர் அமித் ஷா ஏன் ராஜினாமா செய்யவில்லை என்று கேள்வி எழுப்பிய காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி,’பாகிஸ்தானுக்கு சரணடைவதைத் தவிர வேறு வழியில்லை என்றால், இந்தப் போர் ஏன் நின்றது?. அமெரிக்க அதிபர் ஏன் போர் நிறுத்தத்தை அறிவித்தார்?’ என்று வினவினார். வழக்கம் போல் ஒன்றிய
அரசிடம் இருந்து உரிய பதில் இல்லை.