பெண்ணின் வளையலை 3 ஆண்டாக கூட்டில் வைத்திருந்த காகம்
கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டம், மஞ்சேரி அருகே உள்ள திருக்கலங்கோடு பகுதியை சேர்ந்தவர் சரத். இவரது மனைவி ஹரிதா. இவர் வழக்கமாக வீட்டின் பின்புறத்தில் தான் துணிகளை துவைப்பார். கடந்த 2022ம் ஆண்டு பிப்ரவரி 24ம் தேதி ஹரிதா எப்போதும் போல துணிகளை துவைத்துக் கொண்டிருந்தார். சோப்புத் தண்ணீரில் பட்டு சேதமாகி விடக்கூடாது என்பதற்காக அவர் தன்னுடைய 2 பவுன் தங்க வளையலை கழட்டி அங்கிருந்த ஒரு கல்லின் மேல் வைத்திருந்தார்.
அப்போது திடீரென எங்கிருந்தோ பறந்து வந்த ஒரு காக்கா அந்த வளையலை கொத்திக்கொண்டு கண்ணிமைக்கும் நேரத்தில் பறந்து சென்றது. அதைப் பார்த்து ஹரிதா அதிர்ச்சியடைந்தார். எப்படியாவது வளையலை அந்தக் காக்காவிடமிருந்து பறித்துவிட வேண்டும் என்று நினைத்து அதன் பின்னால் அவர் ஓடினார். ஆனால் எந்தப் பலனும் இல்லை. இந்த நிலையில் தான் கடந்த சில தினங்களுக்கு முன் யாரும் எதிர்பாராத ஒரு சம்பவம் நடந்தது.
சரத்தின் வீட்டுக்கு சற்று தொலைவில் அன்வர் சாதத் என்பவர் தன்னுடைய குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது வீட்டில் ஒரு மா மரம் உள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன் இவர் தன்னுடைய குழந்தைகளுக்காக அந்த மரத்திலிருந்து மாம்பழங்களை பறித்துக் கொண்டிருந்தார். அப்போது அந்த மரத்தில் இருந்த ஒரு காக்கா கூட்டில் இருந்த தங்க வளையலின் 3 துண்டுகளை கண்டெடுத்தார். அதை உரியவரிடம் ஒப்படைக்க தீர்மானித்த அன்வர் சாதத், அந்தப் பகுதியில் உள்ள பொது நூலக செயலாளரான ராஜன் என்பவரை சந்தித்து விவரத்தை கூறினார்.
இருவரும் சேர்ந்து நடத்திய விசாரணையில் அந்த வளையலுக்கு உரிமையாளர் ஹரிதா என தெரியவந்தது. இதையடுத்து அந்த வளையலை அன்வர் சாதத், ஹரிதாவிடம் ஒப்படைத்தார். அவரது நேர்மையை அப்பகுதியினர் அனைவரும் பாராட்டினர்.