வடகிழக்கு பருவமழை எதிரொலியாக தமிழகத்தின் மின்தேவை கணிசமாக குறைந்தது: சென்னையில் ஒரே வாரத்தில் 1,035 மெகாவாட் சரிவு
சிறப்பு செய்தி
தமிழ்நாட்டில் தற்போது வீடு, வணிகம், விவசாயம் உள்ளிட்ட அனைத்து பிரிவுகளையும் சேர்த்து மொத்தம் 3.37 கோடி மின் இணைப்புகள் உள்ளன. வீட்டு இணைப்புகள் மட்டும் 2.4 கோடி. மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது தமிழ்நாட்டில்தான் மின் நுகர்வோர் அதிகளவில் உள்ளனர்.
தினமும் மின்சார நுகர்வு சராசரியாக 16,000 மெகாவாட்டாக உள்ளது. கோடைகாலங்களை பொறுத்தவரை வீடு, அலுவலகங்களில் குளிர்சாதன பயன்பாடு அதிகம் இருக்கும் என்பதால் இந்த காலத்தில் மின் தேவை உச்ச அளவை எட்டுகிறது. இந்தாண்டு கடந்த மே 2ம் தேதி மின்தேவை 20,830 மெகாவாட்டாக அதிகரித்தது. இதுவே, இதுவரை உச்ச அளவாக உள்ளது. இந்நிலையில் தென்மேற்கு பருவமழை முடிவடைந்து கடந்த 16ம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை பொழிய தொடங்கியுள்ளது. தொடர் மழையின் காரணமாக மாநிலத்தின் மின்சார தேவை என்பது கணிசமாக குறைந்துள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது:
மழையால் மின்பயன்பாட்டின் தேவை குறைந்துள்ளது. குறிப்பாக, சென்னையில் கடந்த 13ம் தேதி 3,694 மெகாவாட் தேவை இருந்த நிலையில் கடந்த 20ம் தேதி 2,270 மெகாவாட் பயன்பாடே இருந்தன. அதன்படி, ஒரே வாரத்தில் 1,035 மெகாவாட் மின்சார தேவை குறைந்துள்ளது. இதில் ஒரு முக்கிய காரணம், தீபாவளி பண்டிகை. கடந்த சனி, ஞாயிறு மற்றும் திங்கட்கிழமை என தொடர் விமுறையால் தொழிற்சாலைகளில் மின் உபயோகம் இல்லாதது, மழை காரணமாக விவசாய நிலங்களில் பாசனத்திற்காக மோட்டார்கள் பயன்படுத்தாமல் இருந்தது உள்ளிட்ட பல காரணங்கள் உள்ளன. மழை நீடிக்கும் என்பதால் மின் தேவை விகிதம் தொடர்ந்து சரிவை சந்திக்கும். மேலும், வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தேவையான அனைத்து நடவடிக்கைகளும் முடக்கிவிடப்பட்டுள்ளன. குறிப்பாக, அனைத்து கள பணியாளர்கள் மற்றும் பொறியாளர்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
சமீப காலமாக மின்சார விபத்துகள் அதிகமாக உள்ளன. குறிப்பாக கடந்த 6 மாதத்தில் அதாவது ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை 100 விபத்துகள் நிகழ்ந்துள்ளன. இதனால் 11 பேர் உயிரிழந்துள்ளனர். மழை காலங்களில் கவனமுடன் பணியை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளோம். அதேபோல் பொதுமக்களுக்கும் டிரான்ஸ்பார்மர்கள், மின் சார தூண்கள், ஜங்ஷன் பாக்ஸ் மற்றும் பில்லர் பாக்ஸ் போன்ற இடங்களில் செல்லக்கூடாது; எச்சரிக்கையுடன் இருக்க வலியுறுத்தி வருகிறோம். மின் கம்பிகள் மீது மரம் விழுந்தால் உடனடியாக மின்னகத்தை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
அதிகபட்ச நுகர்வு
கடந்த 2024ம் ஆண்டு ஏப்.30ம் தேதி மாநிலத்தின் நுகர்வு 454.32 மில்லியன் யூனிட்கள் பதிவாகி இருந்தன. இதுவே அதிகபட்ச நுகர்வாகும். இந்தாண்டை பொறுத்தவரை கடந்த மார்ச் மாதம் மின் தேவை 406.24 மில்லியன் யூனிட்கள் பதிவாகி இருந்தன. பொதுவாக மாநிலத்தின் மொத்த நுகர்வு 233.786 மில்லியன் யூனிட்கள் என்பது குறிப்பிடத்தக்கது.