டெல்லியில் இருந்து 152 பயணிகளுடன் சென்னை வந்த விமானம் பெங்களூருவில் தரையிறக்கம்
சென்னை: டெல்லியில் இருந்து 152 பயணிகளுடன் நேற்று இரவு 8.30 மணிக்கு சென்னையில் தரையிறங்க வந்த விமானம், தரையிறங்காமல் சுமார் அரை மணி நேரம் வானில் வட்டமடித்து பறந்துவிட்டு பெங்களூர் சென்று தரையிறங்கியது. அதன் பின்பு அந்த விமானம் நள்ளிரவில் பெங்களூரில் இருந்து சென்னை வந்தது.
இதை அடுத்து நேற்று இரவு 9.40 மணிக்கு சென்னையில் இருந்து டெல்லி செல்ல வேண்டிய ஏர் இந்தியா விமானம், சுமார் 4 மணி நேரம் தாமதமாக நள்ளிரவு 1.30 மணிக்கு சென்னையில் இருந்து 160 பயணிகளுடன் டெல்லி புறப்பட்டுச் சென்றது. இதனால் ஏர் இந்தியா விமானங்களில் பயணித்த 312 பயணிகள், பெங்களூர் மற்றும் சென்னை விமான நிலையங்களில் நள்ளிரவில் காத்திருந்து தவிப்புக்குள்ளானார்கள்.
ஏர் இந்தியா விமானம் சென்னையில் தரையிறங்காமல், பெங்களூர் சென்று தரை இயங்கியது ஏன்? என்ற கேள்விக்கு அதிகாரிகள் பதில் அளிக்காததால் பெரும் குழப்பம் நிலவுகிறது.