தேர்தலுக்கு முதல் நாள் உச்சக்கட்ட பரபரப்பு; ‘கம்யூனிஸ்ட்’ மேயரானால் நியூயார்க்கிற்கு நிதி இல்லை: அதிபர் டிரம்ப் பகிரங்க மிரட்டல்
நியூயார்க்: நியூயார்க் மேயர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் வெற்றி பெற்றால், நியூயார்க் நகரத்திற்கு வழங்கும் எங்களது ஒன்றிய அரசின் நிதியை நிறுத்தப் போவதாக அதிபர் டொனால்டு டிரம்ப் மிரட்டியுள்ளது பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. அமெரிக்காவின் நியூயார்க் நகர மேயர் தேர்தல் நாளை (நவ. 5) நடைபெறவுள்ள நிலையில், அங்கு அரசியல் களம் உச்சக்கட்ட பரபரப்பை எட்டியுள்ளது. இந்தத் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் சார்பில் போட்டியிடும் ஜோரான் மம்தானி, கருத்துக்கணிப்புகளில் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகிறார்.
தன்னை ஒரு ‘ஜனநாயக சோசலிஸ்ட்’ என்று அடையாளப்படுத்திக் கொள்ளும் மம்தானியை, அதிபர் டிரம்ப் தொடர்ந்து ‘கம்யூனிஸ்ட்’ என விமர்சித்து வருகிறார். இந்நிலையில், தேர்தலுக்கு ஒரு நாள் முன்பாக அதிபர் டிரம்ப் விடுத்துள்ள மிரட்டல், அமெரிக்க அரசியலில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக அவர் அளித்த பேட்டி மற்றும் சமூக ஊடகப் பதிவில், ‘கம்யூனிஸ்ட் ஒருவரை நியூயார்க் நகரத்தை ஆள அனுமதித்தால், அங்கு ஒன்றிய அரசின் நிதியைக் கொட்டுவது பணத்தை வீணடிப்பதாகும். அதிபராக இருந்து கொண்டு நியூயார்க்கிற்கு அதிக பணத்தை வழங்குவது எனக்கு மிகவும் கடினமாகிவிடும்.
சட்டப்படி தேவைப்படும் குறைந்தபட்ச நிதியைத் தவிர, வேறு எந்த மத்திய நிதியையும் வழங்குவதற்கு வாய்ப்பில்லை. இந்த தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிடும் எனது ஆதரவாளரான முன்னாள் ஆளுநர் ஆண்ட்ரூ கியூமோவிற்கு மக்கள் ஆதரவளிக்க வேண்டும். மோசமான ஜனநாயகவாதிக்கும், கம்யூனிஸ்டுக்கும் இடையே ஒருவரைத் தேர்ந்தெடுக்க வேண்டுமென்றால், நான் மோசமான ஜனநாயகவாதியைத்தான் தேர்ந்தெடுப்பேன்’ எனக் கூறியுள்ளார். டிரம்பின் இந்த மிரட்டலை நிராகரித்துள்ள ஜோரான் மம்தானி, ‘மத்திய அரசின் நிதி என்பது டிரம்பின் தாராள மனத்தால் வழங்கப்படும் ஒன்றல்ல; அது சட்டப்பூர்வமான கடமை. எனவே, நிதி நிச்சயம் வழங்கப்படும்’ என்று பதிலடி கொடுத்துள்ளார்.