7 பிஎம்டபிள்யூ கார் வாங்கும் விவகாரம்; ஊழலை ஒழிப்பதை காட்டிலும் ஆடம்பரம் விரும்பும் லோக்பால்: எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம்
புதுடெல்லி: பிரதமர், ஒன்றிய அமைச்சர்கள், எம்பிக்கள், உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் மீதான ஊழல் வழக்குகளை விசாரிக்கும் அதிகாரம் கொண்டது லோக்பால் அமைப்பு. இந்த அமைப்பு தற்போது உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.எம்.கான்வில்கர் தலைமையில் 6 உறுப்பினர்களுடன் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், லோக்பால் அமைப்பு சார்பில் தலைவர் உட்பட அதன் 7 உறுப்பினர்களுக்கும் ஆடம்பரமான பிஎம்டபிள்யு 3 சிரீஸ் 330லி ரக கார்கள் வாங்க கடந்த 16ம் தேதி டெண்டர் வெளியிடப்பட்டது. ஒருகாரின் விலை சுமார் ரூ.70 லட்சம் வீதம் பிற செலவுகள் உட்பட மொத்தம் ரூ.5 கோடிக்கு 7 கார்கள் வாங்கப்பட உள்ளது.
இதற்கு எதிர்க்கட்சி தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் அளித்த பேட்டியில், ‘‘அன்னா ஹசாரே, கெஜ்ரிவால், ‘ஊழலுக்கு எதிரான இந்தியா’, ஆர்எஸ்எஸ் ஆகியவற்றின் மூலம் மன்மோகன் சிங் அரசுக்கு எதிராக தவறான கதை சித்தரிக்கப்பட்டது. இப்போது லோக்பாலின் யதார்த்தம் மக்கள் கண் முன் இருக்கிறது. இந்த அமைப்பு என்ன விசாரணை செய்தது, யாரை கைது செய்தது என்பது கேட்கப்பட வேண்டும்’’ என்றார்.லோக்பாலின் ஊழலை யார் விசாரிப்பார்கள் என திரிணாமுல் காங்கிரஸ் எம்பி சாகேத் கோகலே கேள்வி எழுப்பி உள்ளார். இது லோக்பால் இல்லை ஜோக்பால் என சிவசேனா எம்பி பிரியங்கா சதுர்வேதி விமர்சித்துள்ளார்.