கரிச்சான் குருவி
கரிச்சான் (Drongo) என்பது சிறிய வகைப் பறவையாகும். ஆசியக் கண்டத்தைத் தாயகமாகக்கொண்ட ஒரு சிறு பாடும் பறவை. இப்பறவை காரி, கருவாட்டு வாலி, கருங்குருவி, கருவாட்டுக் குருவி, மாட்டுக்காரக் குருவி, வெட்டுவலியான் குருவி, நீண்டவால் குருவி, வழியான் குருவி, ஆனைச்சாத்தான் என்ற பெயர்களாலும் அழைக்கப்படுகின்றது. இது தெற்காசியாவின் பெரும்பாலான பகுதிகளில் அதாவது தென்மேற்கில் ஈரான் தொடங்கி இந்தியா, இலங்கையிலும் கிழக்கில் சீனா, இந்தோனேசியா வரையிலும் காணப்படுகின்றது.
இப்பறவை முழுவதும் கறுப்பு நிறத்திலும் வால் பகுதி நீண்டு நுனியில் இரண்டாகப் பிரிந்தும் இருக்கும். இளம் பறவைகளுக்கு வயிற்றுப் பகுதியில் வெள்ளைத் திட்டு இருக்கும். பெரிய பறவைக்கு அலகின் அருகில் வெள்ளைப் புள்ளி இருக்கும். இவ்வினங்களில் துணையினங்கள் சாம்பல்நிற இறகுடனும், சில இனங்கள் தலையில் வெள்ளைக் குறியுடன் காணப்படுகின்றன. பூச்சிகளை இரையாகக் கொள்ளும் இப்பறவை பொதுவாக திறந்தவெளியான வேளாண்மை நிலங்களிலும் அடர்த்தியற்ற காடுகளிலும் வசிக்கிறது. பொதுவாக இவை மேய்ந்து கொண்டிருக்கும் ஆடு, மாடுகளின்மேல் அமர்ந்து இருக்கும். மாடுகள் நடக்கும்போது அவற்றின் கால்பட்டு செடிகளில் இருக்கும் சிறிய பூச்சிகள் பறக்கும்போது இவை பறந்துசென்று காற்றிலேயே அவற்றைப் பிடித்து உண்ணும். கரிச்சான்கள் கரையான், வெட்டுக்கிளிகள், குளவி, எறும்பு, புழுக்கள் போன்றவற்றை விரும்பி உண்ணும். இவை பயமற்ற பறவைகளாகும். இவை தங்கள் கூட்டில் முட்டையிட்டு ஆண், பெண் குருவிகள் மாறிமாறி 15 நாட்கள் அடைகாத்த பிறகு குஞ்சு பொரிக்கும். குஞ்சுகளுக்கு 21 நாட்களில் சிறகுகள், வால் போன்றவை முழுவதுமாக வளரும். முட்டையையும் குஞ்சுகளைப் பாதுகாக்க அதன் கூட்டின் எல்லைக்குள் வரும் தன்னை விடப்பெரிய பறவைகளைக் கூட இப்பறவை தாக்கும் குணம் கொண்டது.