மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கும் விவகாரத்தில் ஆளுநர்களுக்கு தனி விருப்ப உரிமை கிடையாது: உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் காட்டம்
புதுடெல்லி: மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கும் விவகாரத்தில் ஆளுநர் மற்றும் குடியரசுத் தலைவருக்கு கால நிர்ணயம் விதித்தது தொடர்பான விவகாரத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு எழுப்பிய 14 கேள்விகள் தொடர்பான வழக்கின் விசாரணை உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் அமர்விலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வில் ஏழாவது நாளாக நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
இதையடுத்து மேற்குவங்க மாநிலத்தின் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், ‘‘சட்டப்பேரவை நடவடிக்கைக்கு எதிராக ஆளுநர் ஒருபோதும் செயல்பட முடியாது. சட்டப்பேரவையில் எடுக்கப்படும் முடிவே இறுதியானது ஆகும். அதில் ஆளுநர் கேள்வி எழுப்பவோ அல்லது வேறு ஏதேனும் சந்தேகங்களை எழுப்பவோ எந்தவித அதிகாரங்களும் கிடையாது. குறிப்பாக நாடு சுதந்திரம் பெற்றதிலிருந்து ஒரு மசோதாவை குடியரசுத் தலைவர் நிறுத்தி வைத்துள்ளதாக இந்த உச்ச நீதிமன்றம் அறிந்திருக்கிறதா என்றால் கண்டிப்பாக கிடையாது.
சட்டப்பேரவையால் நிறைவேற்றப்படும் மசோதா என்பது மக்களின் அவசரத்தின் அம்சமாகும். அதனை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும். ஆனால் ஆளுநர் என்பவர் அவற்றை எதனையும் கருத்தில் கொள்ளாமல் மசோதாவை கிடப்பில் போடுகிறார். இதையடுத்து நீண்ட இடைவெளிக்குப் பிறகு அதை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்து விடுகிறார். இதைத்தொடர்ந்து அவரும் பல ஆண்டுகளாக மசோதாவை நிலுவையில் போட்டு வைத்து இருக்கிறார். மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கும் விவகாரத்தில் ஜனாதிபதி, ஆளுநர்களுக்கு தனி விருப்ப உரிமை கிடையாது . ஒரு மசோதாவிற்கு எதிராக குடிமக்கள் வேண்டுமானால் நீதிமன்றத்திற்கு சென்று சவால் செய்யலாம். ஆனால் ஆளுநராக இருப்பவர் அதற்கு எந்தவித ஒப்புதலும் தராமல் இருப்பதும், மசோதாவுக்கு எதிராக நடப்பதும் அரிதான ஒன்றாகும். அதுதான் தற்போது அரங்கேறி வருகிறது. என்று தெரிவித்தார்.
இதையடுத்து அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், ‘‘சட்டப்பேரவை மூலம் அனுப்பி வைக்கப்படும் மசோதா, அது ஒன்றிய அரசின் சட்டத்தின்படி விரோதமானது என்று நினைக்கும் பட்சத்தில், ஆளுநர் அதை ஒதுக்கி வைக்க முடியுமா?. அதற்கான அதிகாரம் அவருக்கு உள்ளதா? என்று கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த வழக்கறிஞர் கபில் சிபில், ‘‘இந்திய அரசியல் சாசன வரலாற்றில் அதுபோன்று நடக்காத ஒன்றாகும். குறிப்பாக மாநில சட்டமன்றத்தின் இறையாண்மை, நாடாளுமன்றத்தின் இறையாண்மையைப் போலவே முக்கியமானது. ஆளுநர் இதைத் தாமதப்படுத்த அனுமதிக்க வேண்டுமா என்றால், கட்டாயம் கிடையாது. உதாரணமாக திருமண ஒப்பந்தம் இல்லாவிட்டால் வீடு செயல்பட முடியாது. இது அரசுகளுக்கும் பொருந்தும். எனவே மசோதா விவகாரத்தில் ஆளுநர் ஒரு முரண்பாட்டை கண்டிப்பாக உருவாக்க முடியாது. மேலும் மசோதா விவகாரத்தில் ஆளுநருக்கு காலக்கெடு இல்லை என்று கூட நாம் வைத்துக் கொள்வோம். ஆனால் சட்டமன்றத்தால் மசோதா மீண்டும் இரண்டாவது முறையாக நிறைவேற்றி அனுப்பி வைக்கப்பட்டால், அதனை நிறுத்தி வைக்க மாட்டோம் என்பதை ஆளுநர் தெளிவுபடுத்தி ஒரு தீர்க்கமாக உறுதியளிக்க வேண்டும். இதில் ஆளுநருக்கு ஒருமுறை விருப்புரிமை வழங்கப்பட்டால் அதில் எந்த அர்த்தமும் இருக்காது. மேலும் அந்த அளவிற்கு ஆளுநருக்கு எந்த அதிகாரமும் வழங்கவும் முடியாது. ஏனெனில் சட்டவிதிகளில் அதற்கான இடம் கிடையாது என்று தெரிவித்தார்.
கர்நாடகா அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘‘சட்டப்பேரவையில் மசோதா வரையறுக்கப்படுவது என்பது ஜனநாயகத்தின் அடிப்படையில் ஆகும். இதில் ஆளுநர் மற்றும் குடியரசுத் தலைவர் தலையிட எந்த விதத்திலும் அதிகாரம் கிடையாது. ஒரு அரசின் அமைச்சரவை அதாவது கேபினட் எடுக்கும் முடிவில், இவர்கள் எப்படி தலையிட முடியும். அரசின் அறிவுரைப்படி இயங்கும் கேபினட் எடுக்கும் முடிவில் ஆளுநர் மற்றும் குடியரசுத் தலைவர் தலையீடு இருப்பது என்பது அரசியலமைப்பில் குறுக்கிடும் அட்டூழியம் ஆகும். மேலும் ஆளுநருக்கு 356 சட்டப்பிரிவு என்பதைத் தவிர மசோதா விவகாரத்தில் தனி அதிகாரம் இல்லை.
கூட்டாட்சி முறையில் மாநில, மத்திய சட்டங்களில் முரண்பாடுகள் இருந்தால் நீதிமன்றம் தான் அதனை ஆய்வு செய்து தீர்த்து வைக்க முடியும் எனக்கூறினார்.
இமாச்சல பிரதேச மாநிலம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஆனந்த் சர்மா, ‘‘ சட்டமன்றம் என்பது பாதுகாக்கப்பட வேண்டும். குறிப்பாக ஆளுநர் நடவடிக்கையால் மாநிலங்களை நகராட்சிகளாக மாற்றி விடக்கூடாது என்று தெரிவித்தார். இதையடுத்து வழக்கின் விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.