தவெக கட்சி ஆரம்பித்த பிறகு முதன் முறையாக செப்.13ம் தேதி திருச்சியிலிருந்து விஜய் சுற்றுப்பயணம் துவக்கம்?
திருச்சி: அரசியல் கட்சி ஆரம்பித்த பிறகு முதன் முறையாக தவெக தலைவர் விஜய் செப்.13ம் தேதி திருச்சியில் சுற்றுப்பயணத்தை துவங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நடிகரான விஜய் ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்ற பெயரில் அரசியல் கட்சியை தொடங்கியுள்ளார். தொடர்ந்து, விக்கிரவாண்டியில் முதல் மாநாட்டை நடத்தினார். சமீபத்தில் மதுரையில் 2வது மாநாட்டை நடத்தி முடித்தார். அப்போது அவர் பேசுகையில், ‘விரைவில் தமிழ்நாடு முழுவதும் மக்களை சந்திக்க சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளேன்’ என்றார்.
இந்நிலையில், கட்சி தொடங்கிய பின் முதன் முறையாக திருச்சியில் இருந்து செப். 13ம் தேதி அல்லது செப்.17ம் தேதி விஜய் சுற்றுப்பயணத்தை தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், ஒவ்வொரு மாவட்ட செயலாளர்களும் எந்தெந்த பகுதியில் பிரசாரம் செய்ய வேண்டும் என பட்டியல் ஒன்றை தலைமைக்கு அனுப்பி வைத்துள்ளதாக கூறப்படுகிறது. அந்த வகையில், ‘மக்களுடன் சந்திப்பு’ என்ற பெயரில் ஒரு நாளைக்கு 2 மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்காக நவீன வசதிகள் கொண்ட பிரசார வாகனம் தயார் செய்யப்பட்டுள்ளது.
இந்த வாகனம் மூலம் விஜய் திருச்சியில் சுற்றுப்பயணத்தை துவங்க உள்ளாராம். விஜய்யின் வருகை, சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இடம் ஆகியவை குறித்து விவரங்கள் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.