தஞ்சாவூர், திருச்சியில் ஒன்றிய குழுவினர் ஆய்வு: நெல்மணிகளை சோதனைக்கு எடுத்து சென்றனர், ஈரப்பதம் சதவீதம் உயர்த்த விவசாயிகள் வலியுறுத்தல்
வல்லம்: தஞ்சாவூர், திருச்சியில் நெல் கொள்முதல் நிலையத்தில் நேற்று ஒன்றிய குழுவினர் நெல்லில் உள்ள ஈரப்பதம் குறித்து ஆய்வு செய்து நெல் மாதிரிகளை சேகரித்து சென்றனர். ஒன்றிய குழுவினரிடம் விவசாயிகள் ஈரப்பதம் சதவீதத்தை உயர்த்தி நெல்லை கொள்முதல் செய்ய வலியுறுத்தினர். பருவமழை காரணமாக நெல்லின் ஈரப்பதத்தை 22 சதவீதமாக உயர்த்த வேண்டும் என விவசாயிகள் தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்தனர்.
தொடர்ந்து தமிழக அரசு நெல்லின் ஈரப்பதத்தை உயர்த்துவது தொடர்பாக ஒன்றிய அரசுக்கு பரிந்துரை செய்தது. இதையடுத்து, டெல்டா மாவட்டங்களில் நெல் மாதிரிகளை சேகரித்து ஈரப்பதத்தை ஆய்வு செய்ய, ஒன்றிய அரசு தலா 3 அதிகாரிகளை கொண்ட 3 குழுக்களை அமைத்தது. இந்த குழுவினர் நேற்று முன்தினம் தமிழகம் வந்தனர். நேற்று செங்கல்பட்டில் நெல்லை ஆய்வு செய்தனர். கோவை, நாமக்கல் பகுதிகளில் அரிசி ஆலைகளில் ஆய்வு மேற்கொண்டனர்.
இதையடுத்து, பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ள இந்திய தானிய சேமிப்பு மேலாண்மை மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் துணை இயக்குநர் பி.கே.சிங், தொழில்நுட்ப அலுவலர்கள் ஷோபித் சிவாச், ராகேஷ் பரலா, இந்திய உணவுக்கழக தரக்கட்டுப்பாடு அலுவலர் மோகன் ஆகியோர் தஞ்சாவூர் மாவட்டம் ஆலக்குடியில் உள்ள 2 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது அங்கு விவசாயிகள் கொண்டு வந்த நெல்லை பார்வையிட்டு ஈரப்பத்தை சோதனை நடத்தி நெல்மாதிரிகளை சேகரித்து சோதனைக்காக எடுத்து சென்றனர். தொடர்ந்து பாபநாசம் தாலுகா ராராமுத்திரைக்கோட்டை, அம்மாபேட்டை தாலுகா கீழக்கோவில்பத்து, ஒரத்தநாடு தாலுகா தெலுங்கன்குடிகாடு, வெட்டிக்காடு, திருவோணம் தாலுகா பனிகொண்டான்விடுதி, கீழக்குறிச்சி ஆகிய இடங்களில் உள்ள நேரடி கொள்முதல் நிலையங்களில் ஒன்றிய குழுவினர் ஆய்வு செய்தனர்.
இதுதொடர்பாக தஞ்சை கலெக்டர் பிரியங்கா பங்கஜம் நிருபர்களிடம் கூறுகையில், ‘ஒன்றிய குழுவினரிடம் 22 சதவீதம் வரை ஈரப்பதத்தை உயர்த்தி நெல் கொள்முதல் செய்ய விவசாயிகள் தரப்பில் கோரிக்கை விடப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் 9 நெல்கொள்முதல் நிலையங்களில் மாதிரிகளை சேகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. 2 வாரத்தில் ஆய்வு செய்து தகவல் அளிப்பதாக தெரிவித்துள்ளனர். மழையால் பாதித்த பயிர்கள் குறித்து கணக்கீடு மேற்கொள்ள பிற மாவட்டங்களில் இருந்து வேளாண் அதிகாரிகள் வர உள்ளனர்’ என்றார்.
இதேபோல், திருச்சியில் நேற்று காலை ஒன்றிய உணவு துறை துணை இயக்குனர் ராஜ் கிஷோர் ஷாகி தலைமையில் தொழில்நுட்ப வல்லுனர்கள் ராகுல் சர்மா மற்றும் தனூஜ் சர்மா ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். இதில் லால்குடி தொகுதிக்குட்பட்ட வாளாடி, நகர் பூவாளூர், கொப்பாவளி, கோமாகுடி ஆகிய பகுதிகளில் செயல்பட்டு வரும் நெல் கொள்முதல் நிலையங்களில் அவர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.
நெல்லின் ஈரப்பதம் தொடர்பாக அந்த நெல் நிலையங்களில் இருந்து நெல் மாதிரிகளை சோதனைக்காக எடுத்து சென்றனர். குழுவில் வந்த ஒரு அதிகாரி, விவசாயிகள் குவித்து வைத்திருந்த நெல்குவியலில் ஷூ காலுடன் ஏறினார். இதை பார்த்த விவசாயிகள், நாம் அன்றாடம் சாப்பிடும் உணவு மீது ஷூ காலுடன் ஏறி நிற்கிறாரே என்று புலம்பினர். ஆனாலும் எதையும் கண்டுகொள்ளாத அதிகாரி அந்த நெல்குவியல் மீது ஏறி சென்றார்.