தஞ்சை சிவகங்கை பூங்கா சீரமைக்கப்பட்டு படகு சவாரி மீண்டும் தொடங்கப்படுமா?
*பொதுமக்கள் எதிர்பார்ப்பு
தஞ்சாவூர் : தஞ்சை சிவகங்கை பூங்காவில் ஆமை வேகத்தில் நடைபெறும் நீச்சல்குளம், செயற்கை நீரூற்று புதுப்பிக்கும் பணியை விரைவுபடுத்துவதுடன், சிவகங்கை குளத்தில் படகுசவாரி மீண்டும் தொடங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் இன்றளவும் பலரை பிரமிக்க வைக்கும் தஞ்சை பெரிய கோயிலில் இருந்து வெளியேறும் மழைநீரை சேமிப்பதற்காக கோவிலின் அருகே மாமன்னர் ராஜராஜசோழன் ஆட்சி காலத்தில் சிவகங்கை குளம் வெட்டப்பட்டது.
இந்த குளத்தை சுற்றிலும் பொதுமக்களுக்கான பொழுதுபோக்கு பூங்கா ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் 1871-72-ம் ஆண்டில் அமைக்கப்பட்டது. இந்த சிவகங்கை பூங்கா தஞ்சை மக்களுக்கு மிகவும் பிடித்தமான ஒரு பொழுதுபோக்கு இடமாகும்.பல ஆண்டுகளை கடந்த பழமையான மரங்கள் நிறைந்துள்ளன. 150 ஆண்டுகளை கடந்த இந்த பூங்காவை ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் புதுப்பிக்க மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது.
இதற்காக இந்த பூங்கா கடந்த 2019-ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி மூடப்பட்டு 18 மாதங்களில் அதிநவீன பொழுதுபோக்கு சாதனங்கள், கட்டமைப்புகள் உள்ளிட்ட பொலிவுறு பணிகளை முடிக்க மாநகராட்சி நிர்வாகம் இலக்கு நிர்ணயித்தது. இதையடுத்து இந்த பூங்காவில் இருந்த மான், முயல், புறா, நரி உள்ளிட்டவைகள் வேறு இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன. இதனால் தஞ்சை மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஒரு வேளை புதுப்பித்த பிறகு இவைகள் அனைத்தும் மீண்டும் கொண்டு வரப்படும் என மக்கள் எதிர்பார்த்தனர்.
புதுப்பிக்கும் பணி முழுவதும் நிறைவடைந்த நிலையில் 5 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 8ம் தேதி சிவகங்கை பூங்கா திறக்கப்பட்டது. இந்த பூங்காவில் தற்போது குழந்தைகளுக்கான விளையாட்டு சாதனங்கள், இருக்கைகள், விலங்குகள் சிற்பங்கள், நீருற்றுகளுடன் புல்தரை, சோழர் வரலாற்றை விளக்கக்கூடிய 3 புடைப்பு சிற்பங்களுடன் கதை முற்றம் போன்றவை இடம் பெற்றுள்ளன.
ஏற்கனவே இருந்த தொங்குபாலம், படகுசவாரி உள்ளிட்டவையும் கூட இடம் பெறாததால் அதிருப்தி நிலவுகிறது. மேலும் விலங்குகள் எல்லாம் சிலைகளாக தான் காட்சி அளிக்கின்றன. இதற்கிடையில் ஏற்கனவே இருந்த நீச்சல்குளம், படகுசவாரி, செயற்கை நீரூற்று பூங்கா போன்றவற்றை மீண்டும் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து செயற்கை நீரூற்று பூங்கா, நீச்சல் குளம் ஆகியவை புதுப்பிக்கும் பணி தொடங்கப்பட்டது.
இந்த பணி விரைவில் முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மிகவும் மந்தமாக ஆமை வேகத்தில் தான் பணி நடைபெற்று வருகின்றன. எனவே சிவகங்கை குளத்தின் சுற்றுச்சுவரை முழுமையாக சீரமைத்து, தண்ணீரை முழுமையாக நிரப்பி படகுசவாரியை மீண்டும் தொடங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.