தஞ்சை கல்லணைக் கால்வாயில் குதித்து தாய் உள்பட நான்கு பேர் தற்கொலை..!!
தஞ்சாவூர்: தஞ்சை கல்லணைக் கால்வாயில் குதித்து தாய், கைக்குழந்தை உள்பட நான்கு பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தஞ்சாவூர் 20கண் பாலம் அருகே கல்லணைக் கால்வாய் ஆற்றில் 2 குழந்தைகள் 2 இளம்பெண்கள் சடலமாக ஆற்றில் மிதந்து வருவதை கண்ட அப்பகுதி மக்கள் அவர்களின் உடலை மீட்டு கரைக்கு கொண்டுவந்தனர்.
கைக்குழந்தையை மீட்க முடியாமல் ஆற்றின் வேகத்தில் அடித்து செல்லப்பட்டது. 3 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. உடனடியாக அப்பகுதி மக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கைக்குழந்தையுடன் வந்தவர்கள் யார் என்ற அடையாளம் தெரியவில்லை, விவரமும் தெரியவில்லை. மீட்கப்பட்ட உடல்களில் ஒரு பெண் திருமணமானவர், மற்றொரு பெண் திருமணமாகாதவர் என்பது தெரியவந்துள்ளது.
இறப்பதற்கு முன்பு இவர்களை எதிர்கரையில் உள்ள மக்கள் பார்த்துள்ளனர். கை குழந்தையுடன் 3 பேர் நடந்து வருவதை பார்த்துள்ளனர். அதன் காரணமாக இவர்கள் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என கூறப்படுகிறது. சடலங்களாக மீட்கப்பட்ட இளம்பெண்களின், கையில், பச்சை குத்தியிருக்கும் பெயர்களை வைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.