தண்டையார்பேட்டை, சோழிங்கநல்லூர், விருகம்பாக்கம் உள்பட தமிழகத்தில் மூத்த குடிமக்களுக்கு 25 அன்பு சோலை மையங்கள்: திருச்சியில் முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்; முதியவர்களுடன் கேரம் விளையாடி மகிழ்ச்சி
திருச்சி: சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் மூத்த குடிமக்களின் ஒட்டுமொத்த நல்வாழ்வை உறுதி செய்வதற்காக தமிழகத்தில் தஞ்சாவூர், திருச்சி, மதுரை, கோயம்புத்தூர், சேலம், திருப்பூர், ஈரோடு, தூத்துக்குடி, வேலூர், திண்டுக்கல் ஆகிய 10 மாநகராட்சிகளில் தலா 2 மையங்கள் மற்றும் 2 தொழில்துறை மாவட்டங்களான ராணிப்பேட்டை , கிருஷ்ணகிரி, பெருநகர மாநகராட்சியான சென்னையில் தண்டையார்பேட்டை, சோழிங்கநல்லூர், விருகம்பாக்கம் என மொத்தம் 25 அன்புசோலை மையங்கள் ரூ.10 கோடி மதிப்பில் தொடங்கப்படுகின்றன.
அன்புச்சோலை மையம் மூத்த குடிமக்கள் நலன் கருதி தமிழ்நாடு அரசின் நிதியுதவியுடன் பகலில் மட்டும் இயங்கும் மையமாக செயல்படும். ஒவ்வொரு மையமும் குறைந்தபட்சம் 50 மூத்த குடிமக்கள் பயன்பெறும் வகையில் வசதிகளை கொண்டிருக்கும். இயன்முறை மருத்துவ சேவைகள், யோகா, பொழுதுபோக்கு அம்சங்கள், நூலகம் போன்றவை உள்ளன. ஆண், பெண் இருவரும் வேலை பார்க்கும் குடும்பங்களுக்கு, மூத்த உறுப்பினர்கள் பாதுகாப்பாக பராமரிக்கப்படுவதை உறுதி செய்தலை நோக்கமாக கொண்டு அன்புச்சோலை மையங்கள் செயல்படும்.
திருச்சி கொட்டப்பட்டில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் 25 அன்புசோலை மையங்களை காணொலி வாயிலாக முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார். தொடர்ந்து மகளிர் சுயஉதவிக்குழுவினரால் தயாரிக்கப்பட்ட சிறுதானிய உணவு வகைகள் மற்றும் சத்துமாவு கொண்ட பெட்டகங்களை மூத்த குடிமக்களுக்கு வழங்கி அவர்களுடன் கலந்துரையாடியதோடு கேரம் விளையாடினார். அமைச்சர்கள் கே.என்.நேரு, ரகுபதி, கீதாஜீவன், சிவசங்கர், அன்பில் மகேஸ், மெய்யநாதன், எம்பிக்கள் ஆ.ராசா, திருச்சி சிவா, துரை வைகோ, எம்எல்ஏக்கள் முத்துராஜா, அப்துல் சமது, ஸ்டாலின் குமார், தியாகராஜன், இனிகோ இருதயராஜ் பங்கேற்றனர்.