தண்டையார்பேட்டை மண்டலத்தில் ரூ.231.21 கோடியில் திட்ட பணிகள்: மேயர் பிரியா நேரில் ஆய்வு
சென்னை: தண்டையார்பேட்டை மண்டலத்திற்குட்பட்ட கணேசபுரம் சுரங்கப்பாதையின் மேல் உட்கட்டமைப்பு மற்றும் வசதிகள் நிதியில், ரூ.226.55 கோடியில் புதிய மேம்பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பாலம் 678 மீ. நீளம் மற்றும் 15.2 மீ. அகலத்தில் 4 வழி கொண்ட இருவழி பாதையாகும். மேலும், ரயில்வே இருப்புப் பாதையின் மேல் 58 மீ. நீளத்திற்கு பாலம் கட்டப்பட்டு வருகிறது.
இப்பால பணிகளை மேயர் பிரியா நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். வார்டு-46ல், கூட்ஸ் ஷெட் சாலையில் உள்ள ரயில்வே குளம் 9,240 சதுர மீட்டர் பரப்பளவில் 27,720 கனமீட்டர் (2,77,20,000 லிட்டர்) கொள்ளளவுடன் ஏற்கனவே இருந்தது. தற்போது 29,790 சதுர மீட்டர் பரப்பளவில் 89,370 கனமீட்டர் (8,93,70,000 லிட்டர்) கொள்ளளவு திறனுடன் நீர் சேமிக்கும் வகையில் மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருகிறது.
இப்பபணியை மேயர் பார்வையிட்டு, பணிகளை விரைந்து முடித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். பின்னர், வார்டு-37ல், வியாசர்பாடி, முல்லை நகர் பேருந்து நிலையம் அருகில் ரூ.1.48 கோடி மதிப்பீட்டில் 380.07 சதுர மீட்டர் பரப்பளவில் தரைத்தளம் மற்றும் 2 தளங்களுடன் கட்டப்பட்டு வரும் விளையாட்டுக்கூட வளாகத்தின் கட்டுமானப் பணிகளைப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்த விளையாட்டு கூடத்தில் தரைத்தளத்தில் உடற்பயிற்சிக் கூடம், சேமிப்பு அறையும், முதல் தளத்தில் நவீன திறன் மேம்பாட்டு மையம், வரவேற்பறை, பொருள் வைப்பு அறையும், இரண்டாம் தளத்தில் தங்கும் அறையும் 3 தளங்களிலும் பொதுக் கழிப்பிடங்களும் அமைக்கப்பட்டு வருகிறது. தற்போது நடைபெற்று வரும் பணிகளை மேயர் பார்வையிட்டு பணிகளை தரமாகவும், விரைந்து பயன்பாட்டிற்கு கொண்டு வர அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
தொடர்ந்து, வார்டு-35, 37 மற்றும் 41ல் தண்டையார்பேட்டை நெடுஞ்சாலை, கே.கே.டி. நகர் பேருந்து நிலையம் எதிரில் உள்ள கொடுங்கையூர் பிரதான கால்வாயில் ரூ.3.18 கோடியில் 1894 மீ. நீளத்தில் கடும்பாடியம்மன் கோயில் முதல் பக்கிங்ஹாம் கால்வாய் வரை மேற்கொள்ளப்பட்டு வரும் தடுப்புச் சுவர் உயர்த்தி கட்டப்பட்டு வரும் பணியியை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வுகளின் போது, பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.டி.சேகர், ஆணையர் குமரகுருபரன், குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குனர் டி.ஜி.வினய், துணை ஆணையர்கள் சிவகிருஷ்ணமூர்த்தி, பிரதிவிராஜ், தண்டையார்பேட்டை மண்டல குழு தலைவர் நேதாஜி யு.கணேசன், மாமன்ற உறுப்பினர்கள் டில்லிபாபு, கோபிநாத், ஆனந்தி மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.