தாளவாடி மலைப்பகுதியில் குட்டிகளுடன் சாலையை கடந்து சென்ற காட்டு யானைகள்: வீடியோ வைரல்
சத்தியமங்கலம்: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் உள்ளன. இந்த வனப்பகுதி வழியாக தமிழக-கர்நாடக மாநிலங்களை இணைக்கும் சத்தியமங்கலம்-மைசூர் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. காட்டுப்பகுதியில் இருந்து வெளியேறும் யானைகள் பகல் மற்றும் இரவு நேரங்களில் தேசிய நெடுஞ்சாலையில் நடமாடுவதும் கடந்து செல்வதும் வழக்கம்.
இந்த நிலையில் இன்று காலை வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 5க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் தாளவாடி செல்லும் சாலையில் தனது குட்டிகளுடன் பட்டப் பகலில் சாலையை கடந்து மற்றொரு வனப்பகுதிக்கு சென்றன. அப்போது சாலையில் கார் உள்ளிட்ட வாகனங்கள் சென்றபோதும் வாகனங்கள் செல்வதை பற்றி கவலைப்படாமல் காட்டு யானைகள் ஜாலியாக சாலையை கடந்தன.
யானைகள் சாலையை கடப்பதை கண்ட காரில் சென்ற பயணிகள் தங்களது செல்போன்களில் வீடியோ எடுத்து வாட்ஸ்அப் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது. மலைச்சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் வாகனங்களை விட்டு இறங்க வேண்டாம் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.