தேனாம்பேட்டை-சைதாப்பேட்டை மேம்பால பணி நள்ளிரவில் பொருத்தப்பட்ட இரும்பு உத்திரங்கள்: அமைச்சர் எ.வ.வேலு நேரில் சென்று ஆய்வு
சென்னை: சென்னை, அண்ணா சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க அரசு திட்டமிட்டு, தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை, மேம்பாலம் கட்டும் பணியை துவக்கி, தற்போது, கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த மேம்பாலத்தில் இரும்பு உத்திரங்கள் பொருத்தும் பணிகள், போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் மேற்கொள்ள வேண்டும் என்ற பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு உத்தரவிட்டார்.
அதன்படிநேற்று முன்தினம் நள்ளிரவில் பணிகள் தொடங்கியது. அமைச்சர் எ.வ.வேலு நேரில் சென்று பார்வையிட்டு, ஆலோசனைகளை வழங்கினார். 3.20 கி.மீ. நீளமுடைய இந்த மேம்பாலத்தில் அடித்தள பணிகளும், இரும்பு தூண்கள் அமைக்கும் பணிகளும் ஏற்கெனவே நிறைவுபெற்ற நிலையில், மேம்பால கட்டுமானத்தில் மிக முக்கியமான கட்டமாக கருதப்படும் இரும்பு குறுக்கு உத்திரங்கள் பொருத்தும் பணி நேற்று முன்தினம் நள்ளிரவில் தொடங்கியது.
ஒவ்வொரு உத்திரமும் 22 டன் எடையுடையது. குறுக்கு உத்திரம் 9 டன் எடை கொண்டது. ஒரு பாலக்கண்ணுக்கு 5 உத்திரங்கள் மற்றும் 2 குறுக்கு உத்திரங்கள் பொருத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஒரு பாலக்கண்ணில் மொத்தம் 110 டன் எடையுள்ள இரும்பு கட்டமைப்பு அமைக்கப்படும்.
இவ்வளவு பருமனான இரும்பு உத்திரங்களை தூக்குவதற்காக 150 டன் கொள்ளளவு கொண்ட உயர்திறன் கிரேன்கள் பயன்படுத்தப்பட்டு வெற்றிக்கரமாக பொருத்தப்பட்டு வருகின்றன. இந்த பணிகளின் முன்னேற்றத்தை அமைச்சர் எ.வ.வேலு நள்ளிரவில் பணித்தளத்திற்கே நேரடியாக சென்று நீண்டநேரம் பார்வையிட்டார். இப்பணிகள் முடிந்தவுடன் இப்பகுதியில் நெரிசல் குறையும். வாகனங்கள் விரைவாக செல்வதுடன் பயண நேரம் குறையும்.