ஜவுளி கடை ஷோ கேஷில் பொம்மைக்கு அணிவிக்கப்பட்ட புதுத்துணிகள் மீது கை துடைப்பு: ஓட்டல் ஊழியர்களுடன் கடும் மோதல்
அண்ணாநகர்: சென்னை அண்ணாநகர் 2வது அவென்யூவில் துணிக்கடை உள்ளது. இங்கு முகமது இலாகி என்பவர் வேலை பார்த்து வருகிறார். ஜவுளி கடை அருகே அசைவ உணவகம் உள்ளது. இங்கு சாப்பிட்டுவரும் நபர்கள், ஆடை அலங்கார பொம்மை மற்றும் துணிகளில் கைகளை துடைத்துள்ளனர். இதன்காரணமாக இரண்டு கடைக்காரர்களுக்கும் பிரச்னை இருந்துள்ளது.
இந்த நிலையில், நேற்றிரவு துணிக்கடை ஊழியர்கள், ஓட்டல் ஊழியர்கள் இடையே பயங்கரமோதல் ஏற்பட்டு ஆபாசமாக பேசியதுடன் சரமாரியாக தாக்கியுள்ளனர். அப்போது இரண்டு தரப்பினரும் மாறி, மாறி நடுரோட்டில் விரட்டிச் சென்று தாக்கிக் கொண்டதில் துணிக் கடை ஊழியர்களுக்கு மண்டை உடைந்து ரத்தம் கொட்டியுள்ளது. இதுசம்பந்தமாக இரண்டு தரப்பினரும் சி.சி.டி.வி ஆதாரங்களுடன் திருமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இதன்படி போலீசார் வழக்குபதிவு செய்து நடத்திய விசாரணையில் ஓட்டலுக்கு வரும் வாடிக்கையாளர்கள் கடையின் முன்பு உள்ள பொம்மைகளை தள்ளிவிடுவதுடன் புதிய ஆடைகளில் கைகளை துடைப்பதும் தெரியவந்துள்ளதாக தெரிகிறது. இதுபற்றி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே காயம் அடைந்த துணிக்கடை ஊழியர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.