டெட் தேர்வு கட்டாயம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு; தமிழக அரசு மறுசீராய்வு மனுதாக்கல் செய்ய வேண்டும்: தலைவர்கள் வலியுறுத்தல்
சென்னை: ஆசிரியர்களுக்கு டெட் தேர்வு கட்டாயம் என உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும் என அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தி உள்ளனர். முத்தரசன் (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர்): உச்ச நீதிமன்றம் அளித்துள்ள உத்தரவு சுமார் 1.50 லட்சம் ஆசிரியர்களை பாதிக்கும் என்ற கவலை தொற்றிக் கொண்டுள்ளது. டெட் தேர்வில் பங்கேற்காத ஆசிரியர்கள் அனைவரது பணியும் பாதுகாக்கப்பட வேண்டும்.
அன்புமணி (பாமக தலைவர்): கல்வி உரிமை சட்டம் செயல்படுத்தப்படுவதற்கு முன்பாக பணியில் சேர்ந்த பட்டதாரி, இடைநிலை ஆசிரியர்கள் பணியில் தொடரவும், பதவி உயர்வு பெறவும் தகுதித் தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும்.
பெ.சண்முகம் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர்): உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் மூலமாக பணிப் பாதுகாப்பற்ற சூழல் இந்தியா முழுவதும் உள்ள ஆசிரியர்களுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்ற தீர்ப்பு தொடர்பாக உடனடியாக தமிழ்நாடு அரசு சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து அடுத்த கட்ட சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும். உச்ச நீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்வது உள்ளிட்ட சட்ட ரீதியான நடவடிக்கைகள் மூலம் பாதிக்கப்பட்டுள்ள ஆசிரியர்களை பாதுகாக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.