டெட் தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை வரை அவகாசம் நீட்டிப்பு
சென்னை: டெட் தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. ஒன்றிய அரசின் கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின்படி, இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் ஆகியோர் ஆசிரியர் தகுதி தேர்வில் (டெட்) தேர்ச்சி பெறுவது கட்டாயமாகும். இந்நிலையில், 2025ம் ஆண்டு டெட் தேர்வுக்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த ஆகஸ்ட் 11ம் தேதி வெளியிட்டது. இதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு அன்றைய தினமே தொடங்கியது. இடைநிலை ஆசிரியர்கள் டெட் முதல் தாள் தேர்வுக்கும் பட்டதாரி ஆசிரியர்கள் 2ம் தாள் தேர்வுக்கும் விண்ணப்பித்து வந்தனர். நவம்பர் 15, 16ம் தேதிகளில் தேர்வுகள் நடைபெற உள்ளன.
இந்நிலையில் டெட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் அவகாசம் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில் செப்.10ம் தேதி (நாளை) வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இடைநிலை ஆசிரியர்களும், பி.எட். முடித்த பட்டதாரி ஆசிரியர்களும் https://trb.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக 10ம் தேதி (நாளை) மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம். இடைநிலை ஆசிரியர் பயிற்சி பெறும் இறுதி ஆண்டு மாணவர்கள், பி.எட். இறுதி ஆண்டு படிப்பவர்களும் டெட் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.