இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர்: தென் ஆப்பிரிக்க அணி அறிவிப்பு!
இந்தியா-தென் ஆப்பிரிக்கா இடையிலான முதல் டெஸ்ட் நவம்பர் 14-ம் தேதி தொடங்க உள்ளது. தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர்களில் விளையாட உள்ளது. இதில் இவ்விரு அணிகளுக்கு இடையே முதலில் டெஸ்ட் தொடர் நடைபெற உள்ளது. அதன்படி இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நவம்பர் 14-ம் தேதி ஈடன் கார்டனில் தொடங்க உள்ளது. இது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு உட்பட்ட தொடர் என்பதால் இரு அணிகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இந்நிலையில், இந்த தொடருக்கான தென் ஆப்பிரிக்க அணி அறிவிக்கப்பட்டுள்ளது. காயத்திலிருந்து மீண்ட தென் ஆப்பிரிக்க அணியின் வழக்கமான டெஸ்ட் கேப்டனான பவுமா தலைமையில் தென் ஆப்பிரிக்க அணி விளையாட உள்ளது. அறிவிக்கப்பட்ட தென் ஆப்பிரிக்க அணி விவரம்: டெம்பா பவுமா (கேப்டன்), கார்பின் போஷ், டெவால்ட் பிரெவிஸ், டோனி டி ஜோர்ஜி, ஜுபைர் ஹம்சா, சைமன் ஹார்மர், மார்கோ ஜான்சன், கேசவ் மகராஜ், எய்டன் மார்க்ரம், வியான் முல்டர், செனுரன் முத்துசாமி, ககிசோ ரபாடா, ரியான் ரிக்கல்டன், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், கைல் வெர்ரேய்ன்.