2வது டெஸ்டில் இந்தியா அபாரம் வெஸ்ட் இண்டீஸ் ஒயிட் வாஷ்
புதுடெல்லி: இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணிகள் இடையே 2 போட்டி கொண்ட டெஸ்ட் தொடர் நடந்து வந்தது. அகமதாபாத்தில் நடந்த முதல் டெஸ்டில் இன்னிங்ஸ் மற்றும் 140 ரன் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்ற நிலையில், புதுடெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் 2வது டெஸ்ட் கடந்த 10ம் தேதி துவங்கியது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி ஜெய்ஸ்வால் 175 ரன், கேப்டன் சுப்மன் கில் 129 ரன், சாய் சுதர்சன் 87 ரன் சேர்க்க 134.2 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 518 ரன் என வலுவான நிலையில் டிக்ளேர் செய்தது.
வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் வாரிகன் 3 விக்கெட், ரோஸ்டன் சேஸ் 1 விக்கெட் எடுத்தனர். அடுத்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் குல்தீப், ஜடேஜா அபார பந்துவீச்சால் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி 81.5 ஓவரில் 248 ரன்னுக்கு ஆல் அவுட் ஆகி பாலோ ஆன் பெற்றது. அந்த அணியில் அதிகபட்சமாக அதான்சே 41 ரன், சாய் ஹோப் 36 ரன், சந்தர்பால் 34 ரன் சேர்த்தனர்.
கேப்டன் ரோஸ்டன் சேஸ் டக் அவுட் ஆகி ஏமாற்றமளித்தார். இந்திய அணி தரப்பில் குல்தீப் 5 விக்ெகட், ஜடேஜா 3 விக்கெட், பும்ரா, சிராஜ் தலா 1 விக்கெட் எடுத்தனர். 270 ரன் பின்தங்கிய நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணி 2வது இன்னிங்சை துவக்கியது. இம்முறை சுதாரித்து கொண்ட வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்கள் பொறுப்புடனும், நிதானத்துடனும் விளையாடி ரன்களை குவித்தனர். துவக்க ஆட்டக்காரர் ஜான் கேம்பல் டெஸ்டில் முதல் சதமடித்து 115 ரன் எடுத்து அவுட் ஆனார்.
சாய் ஹோப் 3வது சதம் அடித்த நிலையில் 103 ரன் சேர்த்து அவுட் ஆனார். ரோஸ்டன் சேஸ் 40 ரன் சேகரிக்க ஜஸ்டின் கிரிவ்ஸ் அரை சதமடித்த நிலையில் அவுட் ஆனார். இறுதியாக ஜெய்டன் சீல்ஸ் 32 ரன் அடித்து அவுட் ஆக அந்த அணி 118.5 ஓவரில் 390 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய அணி தரப்பில் குல்தீப், பும்ரா தலா 3 விக்கெட், சிராஜ் 2 விக்கெட், ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர் தலா 1 விக்கெட் எடுத்தார்.
121 ரன் வெற்றி இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. துவக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் 8 ரன்னில் நடையை கட்ட இந்திய அணி 4ம் நாள் ஆட்ட நேர முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 63 ரன் எடுத்திருந்தது. கடைசி நாளான நேற்று சாய் சுதர்சன் 39 ரன், சுப்மன் கில் 13 ரன்னில் அவுட் ஆகினர். அடுத்து வந்த ஜூரலுடன் சேர்ந்து ராகுல் அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார்.
இந்திய அணி 35.2 ஓவரில் 3 விக்கெட் இழந்து 124 ரன் அடித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ராகுல் 58 ரன், ஜூரல் 8 ரன்னுடன் களத்தில் இருந்தனர். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ரோஸ்டன் சேஸ் 2 விக்கெட், வாரிகன் 1 விக்கெட் எடுத்தனர். இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் அணியை ஒயிட் வாஷ் செய்து 2-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை கைப்பற்றியது.
* மேன் ஆப் தி மேட்ச்- குல்தீப் மேன் ஆப் தி சீரியஸ்- ஜடேஜா
2வது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் 5 விக்கெட், 2வது இன்னிங்சிங் 3 விக்கெட் எடுத்த குல்தீப் யாதவ், மேன் ஆப் தி மேட்ச்சாக தேர்வு செய்யப்பட்டார். இந்த தொடரில் 2 ேபாட்டிகளையும் சேர்த்து 104 ரன் மற்றும் 8 விக்கெட் எடுத்த ஜடேஜா மேன் ஆப் தீ சீரியசாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
* சோகமான ‘வேகம்’
இந்த போட்டியில் இரு இன்னிங்சிலும் சேர்த்து இந்திய அணி மொத்தம் 8 விக்கெட்டுகளை மட்டுமே இழந்தது. இதில் ஒரு விக்கெட்டை கூட வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஒரு வேகப்பந்து வீச்சாளர் கூட வீழ்த்தவில்லை என்பதுதான் சோகம். வாரிகன் - ரோஸ்டன் சேஸ் சுழல் கூட்டணிதான் 7 விக்கெட் எடுத்துள்ளனர். ஒருவர் ரன் அவுட் ஆகியுள்ளார்.