2வது டெஸ்ட்டில் கில் ஆடுவது சந்தேகம்: அணியுடன் இணைய நிதிஷ்குமார் ரெட்டிக்கு அவசர அழைப்பு
கவுஹாத்தி: தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் கேப்டன் சுப்மன் கில் பங்கேற்பது சந்தேகம் என்பதால் இந்திய அணியுடன் இணைய ஆல்-ரவுண்டர் நிதிஷ் குமார் ரெட்டிக்கு அவசர அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த இந்தியா, தென் ஆப்பிரிக்கா இடையிலான முதல் டெஸ்டின் போது இந்திய அணி கேப்டன் கில்லிற்கு கழுத்தில் காயம் ஏற்பட்டது. இதை தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில் 5 நாட்கள் ஓய்வில் இருக்க மருத்துவர்கள் கில்லை அறிவுறுத்தியுள்ளனர்.
இதனால் 22ம் தேதி கவுகாத்தியில் நடக்கும் 2வது டெஸ்ட்டில் அவர் களம் இறங்குவது சந்தேகம் என்பதால் நிதிஷ் குமார் ரெட்டி அவசரமாக அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார். ஒருவேளை கில் முழு உடற்தகுதி பெறாத பட்சத்தில் கவுகாத்தி டெஸ்டில் ஆடும் லெவனில் நிதிஷ் குமார் ரெட்டிக்கு வாய்ப்பு கிடைக்கலாம் எனக் கூறப்படுகிறது. தற்போதைய நிலவரப்படி, 2வது டெஸ்டில் கில் களமிறங்க 50-50 வாய்ப்புகளே உள்ளதாகக் கூறப்படுகிறது. ஏற்கனவே முதல் போட்டியில் கில் பேட்டிங் செய்ய இறங்காததால் 30 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வியடைந்தது.
முதல் போட்டியில் கண்ட தோல்விக்கு பதிலடி கொடுத்து, தொடரைச் சமன் செய்ய வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி இருக்கிறது. இந்தச் சூழலில், கேப்டனும் முக்கிய பேட்ஸ்மேனுமான கில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டால், அது அணிக்குப் பெரும் பின்னடைவாக அமையும். என்னதான், நிதிஷ்குமார் ரெட்டி நல்ல ஆல்-ரவுண்டராக இருந்தாலும், அவர் கில் ஆடும் நான்காம் வரிசையில் இதுவரை பேட்டிங் செய்ததில்லை. எனவே, இந்திய அணி பேட்டிங் வரிசையில் சில மாற்றங்களை செய்ய வேண்டிய நிர்பந்தத்தில் இருப்பதால் இது 2வது போட்டியில் எத்தகையை விளைவை ஏற்படுத்தும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.