தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதல்; குழந்தைகள் உள்பட 30 பேர் பலி: பாகிஸ்தான் ராணுவம் நடவடிக்கை
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் விமானப்படை சொந்த நாட்டு மக்கள் மீது நடத்திய வான்வழித் தாக்குதலில் 30 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மற்றும் பலுசிஸ்தான் மாகாணங்களில், தெஹ்ரிக்-இ-தலிபான் பாகிஸ்தான் (டிடிபி) தீவிரவாதிகளின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. கடந்த 2022ம் ஆண்டு நவம்பர் மாதம் டிடிபி அமைப்புடனான போர் நிறுத்தம் முறிந்ததில் இருந்து அங்கு தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. ஆப்கானிஸ்தானில் உள்ள தலிபான் அரசு, டிடிபி தீவிரவாதிகளுக்கு புகலிடம் அளிப்பதாக பாகிஸ்தான் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. மேலும், கடந்த மே மாதம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்த தீவிரவாத முகாம்கள் மீது இந்தியா ‘சிந்தூர் நடவடிக்கை’ என்ற பெயரில் தாக்குதல் நடத்தியது.
இதைத் தொடர்ந்து ஜெய்ஷ்-இ-முகமது, ஹிஸ்புல் முஜாகிதீன் போன்ற தீவிரவாத அமைப்புகள் கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் உள்பகுதிகளுக்கு தங்கள் தளங்களை மாற்றின. இந்த சூழலில், கடந்த சில மாதங்களாகவே பாகிஸ்தான் ராணுவம் அந்த மாகாணத்தில் தீவிரவாத ஒழிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள பள்ளத்தாக்கு பகுதியில் பாகிஸ்தான் விமானப்படை நேற்று திடீர் வான்வழித் தாக்குதலை நடத்தியது. சீனத் தயாரிப்பான ஜே.எப்-17 ரக போர் விமானங்கள் மூலம் சுமார் 8 குண்டுகள் வீசப்பட்டதாக செய்தி வெளியாகி உள்ளன. இந்த கொடூர தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 30 பேர் உயிரிழந்ததாக உள்ளூர் அரசியல்வாதியான இக்பால் அப்ரிடி குற்றம்சாட்டியுள்ளார். பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதல் பாகிஸ்தானில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், இந்த வான்வழித் தாக்குதல் குறித்து பாகிஸ்தான் அரசு இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்த தகவலையும் வெளியிடவில்லை.