பாக். தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்புடைய 3 டாக்டர்கள் உட்பட 8 பேர் அதிரடி கைது
ஜம்மு காஷ்மீர்: ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை தொடர்ந்து, இந்தியாவில் நாசவேலைகள் செய்ய தீவிரவாதிகள் சதித்திட்டம் தீட்டி வருவதாக உளவுத்துறை எச்சரிக்கை செய்திருந்தது. இதைத் தொடர்ந்து காஷ்மீர் உள்ளிட்ட எல்லை ஒட்டிய மாநிலங்களில் கண்காணிப்பு பணிகள் தீவிரமாக்கப்பட்டன. இதற்கிடையே கடந்த மாதம் 19ம் தேதி, ஜம்மு காஷ்மீரின் பன்போரா நவம்காம் பகுதியில் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பிற்கு ஆதரவாக போஸ்டர்கள் பல இடங்களில் ஒட்டப்பட்டிருந்தன. இதன் அடிப்படையில் காஷ்மீர் போலீசாரும், பாதுகாப்பு படையினரும் விசாரணை மேற்கொண்டனர்.
இதில், நாட்டின் பல பகுதிகளில் தீவிரவாத அமைப்புகளுக்கு ஆதரவாக நெட்வொர்க் செயல்பட்டு வருவது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் அடிப்படையில், காஷ்மீர் போலீசார், அரியானா மற்றும் உத்தரப்பிரதேச போலீசாருடன் இணைந்து தீவிரவாத தடுப்பு நடவடிக்கையில் அதிரடியாக களமிறங்கினர். மத்திய புலனாய்வு அமைப்புகளும் இந்த நடவடிக்கையில் இணைந்தன. இந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.அதன் அடிப்படையில், ஜெய்ஷ் இ முகமது அமைப்புக்கு ஆதரவான போஸ்டர் விவகாரத்தில் தொடர்புடைய காஷ்மீரை சேர்ந்த டாக்டர் சும்மில் கனாயியை அரியானாவின் பரிதாபாத்தில் வைத்து போலீசார் கைது செய்தனர். இவர் தங்கியிருந்த வாடகை வீட்டில் நேற்று முன்தினம் நடத்தப்பட்ட சோதனையில் 360 கிலோ அம்மோனியம் நைட்ரேட் வெடிபொருள், ஒரு கேரம் காக் துப்பாக்கி, 2 தானியங்கி துப்பாக்கிகள், 84 தோட்டாக்கள், 5 லிட்டர் வெடிகுண்டு தயாரிக்கும் ரசாயனங்கள், பேட்டரியுடன் கூடிய 20 டைமர்கள் உள்ளிட்டடை பறிமுதல் செய்யப்பட்டன. மொத்தம் 14 பைகளை போலீசார் அங்கிருந்து கைப்பற்றினர். அதைத் தொடர்ந்து சும்மில் நேற்று கைது செய்யப்பட்டார்.
அவர், டெல்லியிலிருந்து 45 கிமீ தொலைவில் உள்ள அரியானாவின் தோவுஜ் நகரில் உள்ள அல் பஃலா பல்கலைக்கழகத்தில் பயிற்றுநராக வேலை செய்து வருகிறார். இந்த பல்கலைக்கழகம் யுஜிசியால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பல்கலைக்கழகம். இவருடன் லக்னோவை சேர்ந்த பெண் டாக்டர் ஷாஹீன் என்பவரும் கைது செய்யப்பட்டார். இவரது காரிலிருந்து ஏகே47 துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது. இவர்கள் இருவரையும் போலீசார் விமானம் மூலம் காஷ்மீர் அழைத்து வந்து தீவிர விசாரணை நடத்தினர்.
அவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில், குல்காமின் வன்போரா பகுதியை சேர்ந்த டாக்டர் அதீல் உட்பட காஷ்மீரை சேர்ந்த மேலும் 6 பேரை கைது செய்தனர். இவர்களிடம் இருந்து மொத்தம் 2,900 கிலோ வெடிபொருள் (அம்மோனியம் நைட்ரேட், பொட்டாசியம் நைட்ரேட் மற்றும் சல்பர்), வெடிமருந்துகளுடன் கூடிய சீன ஸ்டார் பிஸ்டல், பெரெட்டா பிஸ்டல், ஏகே 56 ரைபிள், ஏகே கிரின்கோவ் ரைபிள் மற்றும் ரிமோட் கண்ட்ரோல், டைமர்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளன. கடந்த 15 நாட்களாக நடந்த இந்த ரகசிய ஆபரேஷன் மூலம் தீவிரவாத அமைப்புகளின் பயங்கர தாக்குதல் திட்டங்களையும் போலீசார் வெற்றிகரமாக முறியடித்துள்ளனர்.