தீவிரவாத அமைப்புக்கு ரூ.50 கோடி பரிவர்த்தனை செய்ததாக பெண் அதிகாரியை மிரட்டி ரூ.21.30 லட்சம் பறிப்பு
வேலூர்: வேலூர் சத்துவாச்சாரி பகுதி-1ஐ சேர்ந்தவர் 72 வயது ஓய்வு பெற்ற இன்சூரன்ஸ் நிறுவன பெண் மேலாளர். கடந்த மாதம் டெல்லியில் உள்ள தீவிரவாத தடுப்பு பிரிவு அலுவலகத்தில் இருந்து பேசுவதாக பெண் அதிகாரியை செல்போனில் தொடர்பு கொண்ட மர்மநபர்கள், ‘உங்கள் வங்கி கணக்கில் இருந்து தீவிரவாத அமைப்பினர் ரூ.50 கோடி வரை பணபரிவர்த்தனை செய்து, அதற்காக உங்கள் கணக்கில் ரூ.50 லட்சம் வரை கமிஷனாக செலுத்தியுள்ளதாக தெரிய வந்துள்ளது.
இதற்காக உங்களை விசாரிக்க வேண்டும். விசாரணைக்காக டெல்லி அல்லது லக்னோவுக்கு அடிக்கடி வர வேண்டியிருக்கும்’ என்று தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த பெண் அதிகாரி, அவர்களிடம் தொடர்ந்து பேசியபோது, ‘உங்களால் நேரில் வர முடியாவிட்டால் வீடியோ மூலமே விசாரணை நடத்துகிறோம். அதற்காக முதலில் நீங்கள் எங்கெங்கு சேமிப்பு கணக்குகளை வைத்துள்ளீர்கள் என்ற விவரத்தை தெரிவிக்க வேண்டும்.
விசாரணை நடைபெறுவதால் இதுபற்றி உறவினர்கள், நண்பர்கள் யாரிடமும் தெரிவிக்கக்கூடாது’ என்று அச்சுறுத்தியுள்ளனர். இதை நம்பிய பெண் அதிகாரி தனது வங்கி மற்றும் போஸ்டல் வங்கி சேமிப்பு கணக்குகளை தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய அந்த கும்பல், தற்போது உங்கள் கணக்கில் உள்ள அனைத்து பணத்தையும் நாங்கள் சொல்லும் கணக்கில் மாற்றம் செய்ய வேண்டும். விசாரணை முடிந்ததும், மீண்டும் உங்கள் பணம் உங்கள் கணக்கிற்கு வந்துவிடும் என்று தெரிவித்துள்ளனர்.
இதை நம்பிய பெண் தனது இரண்டு வங்கி கணக்கில் உள்ள ரூ.21 லட்சத்து 30 ஆயிரத்தை அவர்கள் தெரிவித்த கணக்கிற்கு மாற்றியுள்ளார். அதன் பிறகு அந்த கும்பல் தொடர்பை துண்டித்துள்ளனர். இதுதொடர்பாக ஓய்வு பெற்ற பெண் அதிகாரி கொடுத்த புகாரின்பேரில் வேலூர் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.