பாஜக நடிகர் வீட்டில் பயங்கரம்; ‘என் பிணம்தான் இங்கிருந்து போகும்’: சமரசம் பேச போன மனைவி கதறல்
லக்னோ: உத்தரபிரதேசத்தில் விவாகரத்து வழக்கில் சமரசம் பேசச் சென்ற மனைவி மீது கணவரே போலீசில் புகார் அளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வடமாநிலங்களை சேர்ந்த போஜ்புரி நடிகரும், பாஜக நிர்வாகியுமான பவன் சிங்கிற்கும், அவரது மனைவி ஜோதி சிங்கிற்கும் இடையே கடந்த 2021ம் ஆண்டு முதல் விவாகரத்து வழக்கு நடைபெற்று வருகிறது. குடும்ப வன்கொடுமை, கட்டாய கருக்கலைப்பு, திருமணத்திற்குப் புறம்பான உறவுகள் என பவன் சிங் மீது ஜோதி சிங் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
கடந்த மக்களவைத் தேர்தலின்போது இருவரும் சமரசம் ஆனது போலக் காணப்பட்டாலும், தேர்தல் முடிந்ததும் உறவில் மீண்டும் விரிசல் ஏற்பட்டது. தன்னை அரசியல் ஆதாயத்திற்காக பவன் சிங் பயன்படுத்திக் கொண்டதாக ஜோதி சிங் குற்றம் சாட்டியிருந்தார். இந்த நிலையில், லக்னோவில் உள்ள பவன் சிங்கின் அடுக்குமாடிக் குடியிருப்புக்கு நேற்று ஜோதி சிங் சென்றுள்ளார். சுமார் ஒன்றரை மணி நேர சந்திப்பிற்குப் பிறகு பவன் சிங் வெளியேறியதும், அவரது சகோதரர் ஜோதி சிங்கை வெளியேறுமாறு கூறியுள்ளார். இதற்கிடையே, பவன் சிங் தனது பாதுகாப்பு கருதி அளித்த தகவலின் பேரில் அங்கு வந்த காவல்துறையினர், ஜோதி சிங்கை அங்கிருந்து வெளியேற்ற முயன்றனர்.
அப்போது, காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட ஜோதி சிங், ‘நான் என்ன குற்றம் செய்தேன்?’ எனக் கதறி அழுதார். மேலும், வீட்டின் உள்ளே சென்ற அவர், ‘இங்கிருந்து என் பிணம்தான் வெளியே போகும். காவல் நிலையத்திற்கு வரமாட்டேன்’ என்று தற்கொலை மிரட்டல் விடுத்தார். கணவர் வீட்டுக்கு வந்த தன் மீதே அவர் (பவன் சிங்) காவல் நிலையத்தில் புகார் அளித்திருப்பது அதிர்ச்சியளிப்பதாகவும் அவர் கூறினார். இந்த சம்பவங்கள் தொடர்பான காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. விவாகரத்து வழக்கில் சமரசம் பேசுவதற்காக ஜோதி சிங் சென்றதாகவும், அப்ேபாது இருவருக்கும் பிரச்னை ஏற்பட்டதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.