கனடாவின் வான்கூவரில் இருக்கும் இந்திய தூதரகத்தை முற்றுகையிட திட்டம்: காலிஸ்தான்களின் மிரட்டலால் பதற்றம்
ஒட்டாவா: காலிஸ்தான் பிரிவினைவாத அமைப்பின் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கடந்த 2023ம் ஆண்டு ஜூன் மாதம் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, இந்தியா மற்றும் கனடா இடையேயான தூதரக உறவுகளில் பெரும் விரிசல் ஏற்பட்டது. இதன் தொடர்ச்சியாக, காலிஸ்தான் ஆதரவு அமைப்புகள் கனடாவில் உள்ள இந்திய தூதரகங்களுக்கு எதிராக தொடர்ச்சியாக போராட்டங்களையும், மிரட்டல்களையும் விடுத்து வருகின்றன.
கடந்த 2024ம் ஆண்டு நவம்பர் மாதம், டொராண்டோவில் உள்ள இந்திய துணைத் தூதரகம், போதிய பாதுகாப்பு இல்லாத காரணத்தால் தூதரக முகாம்களை ரத்து செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டது. சமீபத்தில், கனடாவின் நிதித்துறை வெளியிட்ட அறிக்கையில் கூட, பாபர் கல்சா இன்டர்நேஷனல் மற்றும் சர்வதேச சீக்கிய இளைஞர் கூட்டமைப்பு ஆகியவை தீவிரவாத அமைப்புகளாக அடையாளம் காணப்பட்டு, அவற்றுக்கு கனடாவிற்குள் நிதி கிடைப்பது உறுதி செய்யப்பட்டது.
இந்த பதற்றங்களுக்கு மத்தியில், தற்போது வான்கூவரில் உள்ள இந்திய தூதரகத்தை முற்றுகையிடப் போவதாக காலிஸ்தான் அமைப்பு புதிய மிரட்டலை விடுத்துள்ளது. இந்த பகிரங்க அறிவிப்பு இரு நாடுகளிடையேயான உறவில் மேலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. கடந்த காலங்களில் இதுபோன்ற போராட்ட அறிவிப்புகளின் போது, வான்கூவர் காவல்துறை தூதரகத்திற்கு அருகிலுள்ள சாலைகளை தற்காலிகமாக மூடி பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டது. இந்தியாவுக்கு எதிரான பிரசாரங்களை கனடா அரசு தொடர்ந்து அனுமதித்து வருவதாக இந்திய அதிகாரிகள் தங்கள் கவலையை வெளிப்படுத்தியுள்ள நிலையில், இந்த புதிய முற்றுகை மிரட்டல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.