டென்னிஸ் தரவரிசை: சின்னர், சபலென்கா நம்பர் 1; 4ம் இடம் பிடித்த ஃப்ரிட்ஸ்
கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் போட்டிகளில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படும் விம்பிள்டன் போட்டிகள் முடிந்த நிலையில், சமீபத்தில் வெளியான ஆடவருக்கான ஏடிபி ஒற்றையர் தரவரிசைப் பட்டியலில், இத்தாலி வீரர் ஜானிக் சின்னர், 1600 புள்ளிகள் அதிகரித்து, 12,030 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார்.
விம்பிள்டன் இறுதிப் போட்டியில் தோல்வியை தழுவிய ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்காரஸ், 700 புள்ளிகள் குறைந்து, 8,600 புள்ளிகளுடன் 2ம் இடத்தில் தொடர்கிறார். இப்பட்டியலில் ஜெர்மனி வீரர் அலெக்சாண்டர் ஸ்வெரெவ் 3ம் இடத்தில் உள்ளார்.
விம்பிள்டனில் சிறப்பாக ஆடி அரை இறுதிக்குள் நுழைந்த அமெரிக்க வீரர் டெய்லர் ஃபிரிட்ஸ் 400 புள்ளிகள் அதிகரித்து 5,035 புள்ளிகளுடன் 4ம் இடத்துக்கு உயர்ந்துள்ளார். பிரிட்டன் வீரர் ஜாக் டிரேப்பர் ஒரு நிலை தாழ்ந்து 5ம் இடத்துக்கு சென்றுள்ளார். செர்பியாவை சேர்ந்த டென்னிஸ் ஜாம்பவான் நோவக் ஜோகோவிச், 500 புள்ளிகள் குறைந்து, 4,130 புள்ளிகளுடன் 6ம் இடத்தில் நீடிக்கிறார். மகளிருக்கான டபிள்யுடிஏ தரவரிசைப் பட்டியலில், பெலாரசை சேர்ந்த அரீனா சபலென்கா, 12,420 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார்.
அமெரிக்க வீராங்கனை கோகோ காஃப், 7,669 புள்ளிகளுடன் 2ம் இடத்தில் உள்ளார். விம்பிள்டன் சாம்பியன் பட்டம் வென்ற போலந்து வீராங்கனை இகா ஸ்வியடெக், 6,813 புள்ளிகள் பெற்று, ஒரு நிலை உயர்ந்து 3ம் இடத்தை பிடித்துள்ளார். அமெரிக்க வீராங்கனை ஜெஸிகா பெகுலா ஒரு நிலை தாழ்ந்து 4ம் இடத்துக்கு சென்றுள்ளார். ரஷ்யாவின் இளம் வீராங்கனை மிர்ரா ஆண்ட்ரீவா 2 நிலை உயர்ந்து 5ம் இடத்தை பிடித்துள்ளார்.