தென்காசியில் அரசு வழக்கறிஞர் வெட்டிக்கொலை
தென்காசி: தென்காசியில் பட்டப்பகலில் செங்கோட்டை நீதிமன்ற அரசு வக்கீல் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அவரது உறவினரை போலீசார் தேடி வருகின்றனர். தென்காசி மாவட்டம் ஊர்மேல்அழகியான் நேதாஜி தெருவைச் சேர்ந்தவர் குழந்தைவேலு மகன் முத்துக்குமாரசாமி (46). இவருக்கு ராஜாத்தி என்ற மனைவியும், குணசேகரன் (14) என்ற மகனும், சரண்யா (13) என்ற மகளும் உள்ளனர். முத்துக்குமாரசாமி செங்கோட்டை நீதித்துறை நடுவர் மன்றம் மற்றும் முன்சீப் நீதிமன்ற அரசு வக்கீலாக பணிபுரிந்து வந்தார்.
இந்நிலையில், நேற்று தென்காசி கூலக்கடை பஜாரில் உள்ள தனது அலுவலகத்தில் வக்கீல் முத்துக்குமாரசாமி பணியாற்றிக் கொண்டிருந்தார். காலை 11.30 மணியளவில் அலுவலகத்திற்கு வந்த மர்ம நபர் ஒருவர் அரிவாளால் வக்கீல் முத்துக்குமாரசாமியை முகம், தலை உள்பட பல இடங்களில் சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார். அவரது சத்தம் கேட்டு அருகில் உள்ளவர்கள் வந்து அவரை மீட்டு தென்காசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்த நிலையில் பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவலறிந்து ஏராளமான வக்கீல்கள் மருத்துவமனையில் திரண்டனர். இந்த கொலை சம்பவத்தை கண்டித்தும், கொலையாளியை கைது செய்யக் கோரியும் சுமார் 200க்கும் மேற்பட்ட வக்கீல்கள் தென்காசி புதிய பேருந்து நிலையம் முன்பு திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தென்காசி எஸ்பி அரவிந்த் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட வக்கீல்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, வக்கீல்கள் குற்றவாளியை உடனடியாக கைது செய்ய வேண்டும். வக்கீல்களுக்கு பாதுகாப்பு வழங்கும் வகையில் வழக்கறிஞர் பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன் வைத்தனர்.
அவர்களிடம் எஸ்பி அரவிந்த், குற்றவாளிகளை கைது செய்வதற்கு தனிப்படை அமைக்கப்பட்டு தேடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். விரைவில் கைது செய்து விடுவோம். வக்கீல்கள் பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்றுவது தொடர்பாக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என்று உறுதி அளித்தார். இதைத் தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். அதனைத் தொடர்ந்து பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது. வக்கீல் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தென்காசியில் நேற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக தென்காசி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் வக்கீலை வெட்டிக் கொலை செய்தவர், முத்துக்குமாரசாமியின் உறவினராக இருக்கலாம் என்ற தகவல் வெளியானது. ஆனால் எதற்காக அரசு வக்கீல் கொலை செய்யப்பட்டார், அதற்கான காரணம் என்ன என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கொலையாளியைத் தேடும் பணியில் தனிப்படை போலீசார் ஈடுபட்டுள்ளனர்
சாமியின் எதிர் வீட்டில் வசித்து வரும் உறவினர் என்ற தகவல் வெளியானது. ஆனால் எதற்காக அரசு வக்கீல் கொலை செய்யப்பட்டார், அதற்கான காரணம் என்ன என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
* கொலையாளி கேரளா தப்பியோட்டம்?
வக்கீல் முத்துக்குமாரசாமி கொலை நடந்த இடத்தில் கொலையாளி பயன்படுத்திய அரிவாள் மற்றும் செல்போன் ஆகியவற்றை போலீசார் கைப்பற்றியுள்ளனர். போலீசார் நடத்திய விசாரணையில், கொலை செய்ததாக சந்தேகிக்கப்படும் ஊர்மேல்அழகியான் பகுதியைச் சேர்ந்த நபர் பைக்கில் வந்து கொலை சம்பவத்தை நடத்திவிட்டு மீண்டும் பைக்கில் புதிய பஸ்நிலையம் சென்று அங்கு உடைகளை மாற்றிவிட்டு பைக்கை உறவினரிடம் ஒப்படைத்துவிட்டு மனைவியுடன் கேரளாவிற்கு சென்றதாக தகவல் கிடைத்துள்ளது. பெண் தொடர்பு காரணமாக இந்த கொலை நடந்ததா அல்லது வேறு ஏதேனும் காரணமா உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர். இதற்கிடையே சமூக வலைதளங்களிலும் கொலை நடந்த வக்கீல் அலுவலகம் அமைந்துள்ள சாலையில் ஒருவர் ரத்த கரை படிந்த ஆடையுடன் செல்வது போன்ற புகைப்படம் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.