தென்காசி கலெக்டர் அலுவலகம் முன்பு மண்ணெண்ணெய் ஊற்றி பெண் தற்கொலை முயற்சி
*போலீசார் சாதுர்யமாக செயல்பட்டு மீட்டனர்
தென்காசி : தென்காசி கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் முன்னிலையில் பெண் ஒருவர் தனது உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி கொண்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.
இதில் தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் பகுதியை சேர்ந்த ராஜ சரஸ்வதி (69) என்ற பெண் மனு கொடுப்பதற்காக வந்திருந்தார். திடீரென ராஜ சரஸ்வதி பிளாஸ்டிக் கவரில் கொண்டு வந்திருந்த மண்ணெண்ணெயை தனது உடலில் ஊற்றிக் கொண்டு தற்கொலைக்கு முயற்சி செய்தார். அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் விரைந்து வந்து அவரது உடலில் தண்ணீரை ஊற்றி காப்பாற்றினர்.
இது குறித்து ராஜ சரஸ்வதியின் கணவர் முப்புடாதி கூறுகையில், ‘எங்களுக்கு சொந்தமான இடம் வேறு ஒருவர் பெயரில் பட்டா உள்ளது. இதனால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் அப்பகுதியில் மண் அள்ளப்படுவது தடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பலமுறை மனு கொடுத்தும் அதிகாரிகள் விசாரணை நடத்தியும் தீர்வு கிடைக்கவில்லை’ என்றார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.