தற்காலிக கவுரவ விரிவுரையாளர் நியமனம் இணையதள விண்ணப்ப பதிவு தொடக்கம்
இளங்கலை பட்டப்படிப்பில் 1,252 மாணவிகளுக்கும், முதுகலை பட்டபடிப்பில் 237 மாணவிகளுக்கும், எம்பில் பட்டப்படிப்பில் 34 மாணவிகளுக்கும், 19 மாற்றுத்திறனாளி மாணவிகள், மூன்றாம் பாலினத்தை சேர்ந்த ஒருவர் என மொத்தம் 1,543 மாணவிகளுக்கு உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் பட்டங்களை வழங்கினார்.
முன்னதாக அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் 574 தற்காலிக கவுரவ விரிவுரையாளர்கள் நியமனம் செய்வதற்காக, இணையதள விண்ணப்பப் பதிவை ராணி மேரி கல்லூரியில் அமைச்சர் கோவி.செழியன் தொடங்கி வைத்தார்.
நடப்பாண்டில் புதிய கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதில் நிரந்தர ஆசிரியர்கள் பணியமர்த்தப்படும் வரை கல்வி கற்றலில் தொய்வு ஏற்படாமல் இருக்க 574 கவுரவ விரிவுரையாளர்களை தற்காலிகமாக பணியமர்த்த முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார். அதன்படி, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் தற்காலிக கவுரவ விரிவுரையாளர்கள் உரிய கல்வித் தகுதியுடன் ஒளிவுமறைவற்ற முறையில், வெளிப்படைத்தன்மையுடன் நிரப்பிட கல்லூரிக் கல்வி ஆணையருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பங்களை www.tngasa.org என்ற இணையதளம் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். 34 பாடப்பிரிவுகளுக்கு அனுமதிக்கப்பட்டுள்ள இணையதளத்திலேயே 574 பணியிடங்களின் விவரங்களும் தெரிவிக்கப்பட்டுள்ளன. தகுதியுள்ளவர்கள் வரும் ஆகஸ்ட் 4ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.