குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு காரணமாக சுற்றுலாப் பயணிகள் குளிக்க தற்காலிக தடை!
தென்காசி: தென்காசி மாவட்டம் குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு காரணமாக சுற்றுலாப் பயணிகள் குளிக்க தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கனமழையால் நீர்வரத்து அதிகரித்துள்ளது. கடலோர தமிழகம் மற்றும் அதனையொட்டிய குமரிக்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் இன்று முதல் 3 நாட்களுக்கு பெரும்பாலான மற்றும் அனேக இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இதனிடையே, தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் தற்போது பரவலாக மழை பெய்ய தொடங்கியது. தென்காசி மாவட்டத்தையொட்டிய மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இதனால் குற்றால அருவிகளில் திடீரென நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், பாதுகாப்பு கருதி குற்றாலம் மெயின் அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஐந்தருவி, மெயின் அருவியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். நேற்று முன் தினம் வெள்ளப்பெருக்கு காரணமாக குளிக்க தடை விதிக்கப்பட்ட நிலையில், நேற்று சீராக தண்ணீர் விழுந்ததால், குளிக்க அனுமதிக்கப்பட்டது. இந்நிலையில், மீண்டும் அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்தனர்.