கோயில் நில ஆர்ஜிதத்திற்காக ரூ.25 கோடி நிதி வழங்கா விட்டால் தலைமை செயலர் ஆஜராகவேண்டும்: ஐகோர்ட் கிளை உத்தரவு
மதுரை: கோயில் நில ஆர்ஜிதத்திற்காக ரூ.25 கோடி வழங்காவிட்டால் தலைமை செயலர் ஆஜராக வேண்டுமென ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த சரவணன், பொன்.கார்த்திகேயன் ஆகியோர் ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுக்களில், ‘‘மதுரை ஒத்தக்கடையில் உள்ள கோதண்ட ராமசாமி கோயிலுக்குச் சொந்தமான நிலம் ஐகோர்ட் கிளைக்கு எதிரே உள்ளது. அந்த நிலத்தை ஆர்ஜிதம் செய்து, ஐகோர்ட் கிளைக்கு வாகன நிறுத்துமிடம் மற்றும் கூடுதல் கட்டிடங்களைக் கட்டத் தேவையான நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தனர்.
இந்த மனுக்களை கடந்தாண்டு விசாரித்த நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், கே.கே.ராமகிருஷ்ணன் ஆகியோர், ‘‘கோதண்ட ராமசாமி கோயிலுக்குச் சொந்தமான நிலத்தை ஆர்ஜிதம் செய்து வாகன நிறுத்துமிடம் மற்றும் ஐகோர்ட் கிளைக்கு கூடுதல் கட்டிடங்கள் கட்டுவதற்காக ஐகோர்ட் கிளை நிர்வாகத்திடம் ஒப்படைக்க அறநிலையத்துறை முடிவு செய்துள்ளது. இதற்காக ரூ.25 கோடியை கோதண்ட ராமசாமி கோயிலுக்கு தமிழ்நாடு அரசு செலுத்த வேண்டும் என் பரிந்துரை கடிதத்தை இந்து சமய அறநிலையத்துறை அனுப்பியது. இது குறித்து தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று உத்தரவிட்டிருந்தனர்.
இந்த மனுக்கள் நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், கே.கே.ராமகிருஷ்ணன் ஆகியோர் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், ‘‘நிதி ஒதுக்கீடு தொடர்பான பணிகள் அரசின் பரிசீலனையில் உள்ளது. விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக கால அவகாசம் வழங்க வேண்டும்’’ என கூறப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள், ‘‘கடந்த ஓராண்டாக நிதி ஒதுக்காமல் இருப்பது ஏன்? வரும் 13ம் தேதிக்குள் ரூ.25 கோடியை அறநிலையத்துறைக்கு வழங்க வேண்டும். அவ்வாறு வழங்காத பட்சத்தில் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலர் இந்த நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும்’’ என உத்தரவிட்டு, விசாரணையை ஆக. 13க்கு தள்ளி வைத்தனர்.