கோயிலில் தரிசனம் செய்ய வந்தபோது குக்கே சுப்ரமணியாவில் மாயமான தமிழ்நாட்டு வாலிபர் பத்திரமாக மீட்பு
கோயிலுக்கு தரிசனம் செய்ய வந்தபோது, சதீஷ் திடீரென காணாமல் போனார். அவரை, உறவினர்கள் சுமார் 3 நாட்களாக தேடியும் கிடைக்கவில்லை. இதையடுத்து அவர்கள், ஊர் புறப்பட்டு சென்றனர். சதீஷ், கடந்த ஒரு மாதமாக குக்கே சுப்ரமணியா கோயில் பகுதியில் சுற்றி திரிந்துள்ளார். மழை நேரத்திலும், சாலையில் படுத்து உறங்கியது அங்குள்ள மக்களை கண்கலங்க செய்தது. இதையடுத்து அவரிடம் விசாரித்தபோது, தமிழ்நாட்டின், கோவை மாவட்டத்தை சேர்ந்தவர் என தெரிந்தது.
இதுகுறித்து கோவையில் உள்ள தனியார் உதவி மையத்துக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில், அவர்கள் மூலம் ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு, சதீஷ் பெங்களூரு அழைத்துச் செல்லப்பட்டார். இன்று அவர், பெங்களூரில் இருந்து கோவைக்கு அழைத்து செல்லப்படுவார். அவர்களது தொண்டு நிறுவனத்தில் அடுத்த ஒரு மாதத்திற்கு வைத்து பாதுகாக்கப்படுவார் என கோவையை சேர்ந்த சமூக நல ஆர்வலர் தெரிவித்தார்.
இதுகுறித்து குக்கே சுப்ரமணியாவை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் கூறுகையில், வாலிபர் சதீஷ், சுப்ரமணியா பகுதியில் சுற்றி திரிந்தார். அவரிடம் விசாரித்தபோது, தமிழில் பதிலளித்தார். அதன்படி கிராம பிடிஓ மகேஷுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும், சமூக ஆர்வலர்கள் மற்றும் கிராம கட்சி உறுப்பினர்கள் சிலரது உதவியுடன் சதீஷை அழைத்து சென்று பராமரித்து, அவருக்கு புதிய ஆடைகள் மற்றும் உணவு வழங்கி சிகிச்சை அளிக்கப்பட்டது.
பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் தனது பெயரைக் கூறி, கோவையில் தனக்கு தாய் மற்றும் சகோதரிகள் இருப்பதாக கூறினார். தொடர்ந்து, கோவையில் உள்ள போலீஸ் ஹெல்ப்லைன் எண்ணை தொடர்பு கொண்டபோது, எந்த பயனும் இல்லை. இதையடுத்து கோவையை சேர்ந்த, தனியார் தொலைக்காட்சி நிருபரை தொடர்பு கொண்டு, அவரது உதவியுடன் என்ஜிஓவுக்கு தெரிவிக்கப்பட்டது. அவர்கள் மூலம் கோவை காந்தி நகர் ஆர்எஸ் புரத்தை சேர்ந்தவர் என்பது உறுதியானது.
இதை தொடர்ந்து, என்ஜிஓ மூலம், வாலிபரின் தாய் சரஸ்வதி மற்றும் குடும்பத்தினரை, தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தபோது, அவர்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். இதற்கிடையில் சதீஷ், பெங்களூரில் உள்ள ஆசிரமத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கிருந்து ஊருக்கு அழைத்துச் செல்ல முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. என்ஜிஓ ஒத்துழைப்போடு, பெங்களூருவில் உள்ள சர்வீஸ் சென்டரில் இருந்து தமிழ்நாட்டின் கோவை மாவட்ட கலெக்டர் மூலம் சதீஷ், சொந்த ஊருக்கு அழைத்து செல்லப்படுகிறார் என்றனர்.