தொலைநோக்கி (Telescope)
தொலைநோக்கியை உருவாக்கிய பெருமை மூவரைச் சார்ந்ததாகும். அவர்கள் ஹான்ஸ் லிப்பர்ஷே, ஜக்காரியாஸ் ஜான்சன், கலிலியோ கலிலி ஆகியோர் ஆவர். 16ஆம் நூற்றாண்டிலேயே கண் கண்ணாடி செய்பவர்கள் லென்ஸ் என்னும் வில்லைகளை உருவாக்கிவிட்டனர். 1608ஆம் ஆண்டு டச்சு நாட்டைச் சேர்ந்த கண்ணாடி தயாரிப்பாளரான ஹான்ஸ் லிப்பர்ஷே என்பவர் குழி, குவி ஆடிகளைப் பயன்படுத்தி மூன்று மடங்கு தூரத்தில் உள்ள பொருட்களைப் பார்க்கும் படியான தொலைநோக்கியை உருவாக்கி, காப்புரிமைக்கு விண்ணப்பித்தார். அப்போது அதே நகரில் வசித்த ஜக்காரியஸ் ஜான்சன் என்பவரும் தொலைநோக்கியைத் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு, காப்புரிமை கேட்டு விண்ணப்பித்தார். ஹான்ஸ் லிப்பர்ஷேவுக்குத் தொலைநோக்கிக்கான காப்புரிமையும் ஜான்சனுக்குக் கூட்டு நுண்ணோக்கிக்கான காப்புரிமையும் வழங்கப்பட்டது.
1609ஆம் ஆண்டு கலிலியோ கலிலி டச்சு நாட்டு வில்லைகளைப் பற்றிக் கேள்விப்பட்டார். இவரது தொலைநோக்கி 20 மடங்கு தூரத்தில் இருந்த பொருட்களையும் காட்டியது. அதுவரை உளவு பார்க்கும் கருவியாக இருந்த தொலைநோக்கியை கலிலியோ கலிலி வானியல் ஆய்வுக்குப் பயன்படுத்தினார். கலிலியோ கலிலி அவர் மேம்படுத்திய தொலைநோக்கியைக் கொண்டு வானியல் நிகழ்வுகளின் தரவுகளைச் சேகரிக்க சூரிய மையக் கோட்பாட்டை அறிவியல் நோக்கில் நிறுவினார். தொலைநோக்கி என்னும் பெயர் பல வகையான கருவிகளையும் குறிக்கப் பயன்படுகின்றது. இவை அனைத்தும், ஏதோ ஒரு வகையில் ஆய்வு செய்வதற்கு ஏற்றவாறு மின்காந்தக் கதிர்களை உள்வாங்கிக் கொள்வதை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றுள் மிகவும் பொதுவான வகை ஒளியியல் தொலைநோக்கி ஆகும்.