தெலங்கானா மாநிலத்தில் கோர விபத்து அரசு பேருந்து மீது ஜல்லி லாரி மோதி 19 பேர் உடல் நசுங்கி பலி: ஜல்லி கற்களுக்குள் புதைந்த பரிதாபம்; 24 பேருக்கு தீவிர சிகிச்சை
திருமலை: தெலங்கானா மாநிலம் விகாரபாத் மாவட்டம் தாண்டூரில் இருந்து ஐதராபாத்திற்கு நேற்று அதிகாலை 4.50 மணிக்கு அரசு பஸ் புறப்பட்டது. இந்த பஸ்சில் வார விடுமுறை முடிந்து திங்கட்கிழமை என்பதால் பலர் பணிக்காகவும், கல்லூரிகளுக்காகவும் செல்ல அதிக அளவில் பயணிகள் வந்தனர். இதனால் இருக்கைகள் அனைத்தும் நிரம்பியதால் நின்றபடி பல பயணிகள் பயணித்தனர். மொத்தம் 70 பயணிகள் பஸ்சில் இருந்தனர். ரங்கரெட்டி மாவட்டம் செவெல்லா மண்டலத்தில் உள்ள மிர்ஜாகுடா அருகே உள்ள நெடுஞ்சாலை வளைவில் அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்திசையில் ஜல்லி கற்களை ஏற்றிக் கொண்டு அதிவேகமாக வந்த டிப்பர் லாரி மின்னல் வேகத்தில் பஸ் மீது மோதியது. இதில் பஸ்சின் டிரைவர் சீட்டில் இருந்து வலது புறத்தில் பஸ்சின் 5 இருக்கைகளை இடித்த லாரி, பஸ் மீது கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் பஸ்சின் பாதி பகுதி நசுங்கியது. மேலும் டிப்பர் லாரியில் இருந்த ஜல்லி கற்கள் முழுவதும் பஸ்சில் பயணம் செய்த பயணிகள் மீது விழுந்ததால் பலர் ஜல்லி கற்களுக்குள் புதைந்து பஸ்சில் இருந்து கீழே இறங்க முடியாமல் கதறினர். ஜல்லி கற்கள் விழுந்ததால் காயமடைந்தவர்களை மீட்பது கடும் சிரமத்தை ஏற்படுத்தியது. அங்கிருந்த பொதுமக்களும் இதைபார்த்து பதறிக்கொண்டு பஸ்சில் சிக்கியவர்களை மீட்க முயன்றனர். ஆனால் முடியவில்லை.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், தீயணைப்பு வீரர்கள் ஜேசிபியை வரவழைத்து பஸ்சின் ஒரு புறத்தில் உடைத்து காயமடைந்தவர்களை மீட்டு செவெல்லா மருத்துவமனைக்கு அனுப்பினர். இந்த விபத்தில் டிப்பர் லாரி டிரைவர், பஸ் டிரைவர் உள்பட 7 ஆண்கள், 11 மாத குழந்தை, 11 பெண்கள் என மொத்தம் 19 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். காயமடைந்த 24 பேருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த கோர விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்து, நிவாரண உதவியை அறிவித்துள்ளார்.
* ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 சகோதரிகள் பரிதாப பலி
ஐதராபாத்தில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரியில் பி.டெக் படித்த சகோதரிகள் சாய்பிரியா, தனுஷா மற்றும் நந்தினி முதலாமாண்டு, இரண்டாம் ஆண்டு, மற்றொருவர் மூன்றாம் ஆண்டு என படித்து வருகின்றனர். மூவரும் வார விடுமுறைக்காக தாண்டூரில் உள்ள வீட்டிற்கு வந்த சகோதரிகள் மீண்டும் கல்லூரிக்கு செல்ல தனது தந்தையுடன் வந்து பஸ் ஸ்டாண்டில் பஸ்சில் ஏறியுள்ளனர். தந்தை புன்னகையுடன் தனது மகள்களை வழி அனுப்பி வைத்தார். இதற்கிடையில், பேருந்து விபத்தில் சிக்கியதில் மூன்று சகோதரிகளும் உயிரிழந்தனர். அவர்களின் தந்தை ஒரு டிரைவராக பணி புரிந்து நான்கு மகள்களில் கடந்த மாதம் தனது மூத்த மகளுக்கு திருமணம் செய்து வைத்தார். இதனால் அவர்கள் குடும்பத்தில் மிகவும் மகிழ்ச்சியாக இருந்த நேரத்தில், மீதமுள்ள மூன்று மகள்களும் சாலை விபத்தில் இறந்ததை கேட்டு கதறிய சம்பவம் அங்குள்ளவர்களின் கண்களில் கண்ணீரை வரவழைத்தது.