'கல்வியில் சிறந்த தமிழ்நாடு' நிகழ்ச்சியில் பங்கேற்க தெலுங்கானா முதல்வருக்கு நேரில் அழைப்பு விடுத்தார் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா!!
ஹைதராபாத் : சென்னையில் நடைபெறும் கல்வியில் சிறந்த தமிழ்நாடு விழாவிற்கான அழைப்பிதழை தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியை அமைச்சர் டிஆர்பி ராஜா நேரில் சந்தித்து வழங்கினார். 2025-2026ம் கல்வி ஆண்டிற்கான புதுமைபெண், தமிழ் புதல்வன் திட்டங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி ஆகியோர் தொடங்கி வைக்கும் விழா, சென்னை ஜவஹர்லால் நேரு உள் விளையாட்டு அரங்கில் சிறப்பாக நாளை நடைபெற உள்ளது.
கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்னும் கருப் பொருளில் நடக்கும் இவ்விழா, தமிழ்நாட்டின் மாபெரும் கல்வி எழுச்சியினை கொண்டாடப்பட உள்ளது. விழாவில் அமைச்சர்கள், மேயர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்று சிறப்பிக்க உள்ளனர். இந்த நிலையில், ஹைதராபாத்தில் தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியை நேரில் சந்தித்த தமிழ்நாடு தொழிற்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா,கல்வியில் சிறந்த தமிழ்நாடு விழாவிற்கான அழைப்பிதழை வழங்கினார்.
இதனிடையே கல்வியில் சிறந்த தமிழ்நாடு விழா குறித்து தமிழக அரசின் ஊடகச் செயலரும், வருவாய்த் துறை செயலருமான பி.அமுதா பேசுகையில்,"இந்நிகழ்ச்சி, நான் முதல்வன், முத்லவரின் காலை உணவு திட்டம், புதுமைப்பெண், தமிழ்ப் புதல்வன், விளையாட்டின் சாதனையாளர்கள், சிறப்புக் குழந்தை சாதனையாளர்கள் இது போன்ற ஏழு திட்டங்களை உள்ளடக்கி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. செப்டம்பர் 25-ம் தேதி மாலை 4 மணி முதல் 7 மணிவரை ஒவ்வொரு சிறப்பு திட்டத்தை பற்றி சாதனையாளர்கள், பயன்பெற்றவர்கள், பங்கேற்பாளர்கள் அனுபவங்களை பகிர்வார்கள். இதில், 2025- 26ம் ஆண்டுக்கான புதுமைப் பெண் மற்றும் தமிழ்ப் புதல்வன் ஆகிய திட்டங்களுக்கான நிதி வெளியீடும், மாணவர்களுக்கான ரூ.1000 தரக்கூடிய ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளது."இவ்வாறு தெரிவித்தார்.