தெலங்கானா அமைச்சரவையில் அசாருதீனுக்கு வாய்ப்பா?
ஐதராபாத்: தெலங்கானா அமைச்சரவையில் முன்னாள் இந்திய கிரிக்கெட் கேப்டன் முகமது அசாருதீன் சேர்க்கப்பட வாய்ப்புள்ளதாக வெளியான தகவலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தெலங்கானாவில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. முதல்வர் ரேவந்த் ரெட்டி அமைச்சரவையில் 15 அமைச்சர்கள் இடம் பெற்றுள்ளனர். இன்னும் 3 இடங்கள் காலியாக உள்ளது. மேலும் சிறுபான்மையினருக்கான பிரதிநிதித்துவம் இல்லை. இதற்கிடையே கடந்த வாரம் ஆகஸ்ட் மாதம் ஆளுநருக்கு உள்ள அதிகாரத்தின் அடிப்படையில் அசாரூதின் எம்எல்சியாக அறிவிக்கப்பட்டார்.
இருப்பினும் ஆளுநர் ஜிஷ்ண தேவ் வர்மா இதை இன்னும் அங்கீகரிக்கவில்லை. இந்த சூழலில் அசாருதீன், தெலங்கானா அமைச்சராக உள்ளதாக தகவல் பரவியது. இதுபற்றி தெலங்கானா மாநில காங்கிரஸ் தலைவர் பொம்மா மகேஷ் குமார் கவுட் கூறும்போது,’ அது சாத்தியமாகலாம். அதை நான் உறுதிப்படுத்தவோ மறுக்கவோ முடியாது’ என்றார். அசாருதீன் 2023 தெலங்கானா சட்டப்பேரவை தேர்தலில் ஜூபிலி ஹில்ஸ் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.